பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ஆ அ.ச. ஞானசம்பந்தன் அந்த மக்கள் வாசிக்கும் இசைக் கருவிகள் என்பவற்றை விரித்துச் சொல்லும். திருமுருகாற்றுப்படையில் இந்த முறை கையாளப்படவில்லை. குமரன் குன்றிடை வாழ்பவன் ஆதலால், பெரும்பாலும் குறிஞ்சி, முல்லை என்ற நிலங்கள்பற்றிய வர்ணனையே அதிகம் இடம் பெற்றிருக்கிறது. திருச்சீரலைவாய் (திருச்செந்துTர்) என்ற ஊர் மட்டும் நெய்தல் நிலத்தில் இருக்கின்றதேனும் நெய்தல் வர்ணனை அப்பகுதியில் அதிகம் இல்லை. இது திருமுருகாற்றுப்படையின் தனித்துவமாகும். இறைவன், உயிர்கள், இறைவனுக்கும் உயிர் களுக்கும் உள்ள தொடர்பு என்ற தத்துவ விசாரணையை மிக எளிய முறையில் பாடிச் செல்கிறது திருமுருகாற்றுப்படை. வேத காலத்தை அடுத்த உபநிடத காலத்தில் அறிவின் துணைகொண்டு, பிரமத்தை அறிய வேண்டும் என்ற கருத்துத்தான் இடம் பெற்றிருந்தது. கல்வி அறிவு இல்லாத கடை நிலை மக்களைப் பற்றி உபநிடதங்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் உபநிடதங்களை அடுத்து ஆறு அல்லது ஏழு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வந்த திருமுருகாற்றுப் படை இந்தக் கடைநிலை மக்களையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது. வேதத்திலோ உபநிடதங் களிலோ பக்திக்கு இடமில்லை. அறிவின் துணை கொண்டு, உண்மையைக் காண வேண்டும் என்று முற்படும் உபநிடதங்களில், அறிவை அமிழ்த்தி வெளிப்படும் உணர்வாகிய பக்திக்கு இடமில்லாமல் போனது நியாயமே ஆகும்.