பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 5 சங்க காலம் தொட்டே பக்திக்கு முதலிடம் தந்தது தமிழ். பக்தியென்று சொல்லும்போது அதனை உடையவர்களிடையே வேறுபாடுகள் கற்பிக்க முடியாது. கற்றார்-கல்லாதவர், அரசன்-ஆண்டி என்ற பிரிவினை போக, இந்தப் பிரிவினைகளில் எதிலும் வராத மாக்கள் என்று சொல்லத்தக்க கடைநிலை மக்களையும் பக்தி ஒன்றுசேர்த்தது. பின்னர், இக்கருத்து விரிவாக நாயன்மார்கள் ஆழ்வார்கள் காலத்தில் இடம் பெற்றதேனும், இன்று கிடைத்துள்ள தமிழ் இலக்கியங்களில் பக்திக்கு முதலில் இடம் தந்தது திருமுருகாற்றுப்படையேயாகும். இறைவன் பற்றிய 'தத்துவ ஆராய்ச்சியுடையாரின் பக்தியும் கல்வி அறிவு ஒரு சிறிதும் இல்லாத கடைநிலை மக்களின் பக்தியும் ஒரே பாடலில் முதன்முதலில் இடம் பெறுவது திருமுருகாற்றுப்படையில்தான். கடவுள் பற்றிய சிந்தனையில் ஈடுபட்ட நம் முன்னோர் நம்முடைய அறிவு கொண்டு ஆதி அந்தம் இல்லாத அந்தப் பரம்பொருளை அறிதல் இயலாத காரியம் என்று கூறினர். அதனையே திருமுருகாற்றுப் படை நின் அளந்து அறிதல் மன்னுயிர்க்கு அருமை’ (அடி 278) என்ற ஒரே தொடரில் கூறிவிட்டது. அளந்து அறிதல் என்றால் அறிவின் துணைகொண்டு இறைப் பொருளின் இலக்கணத்தை, தன்மையை, ஆராய்தல் என்ற பொருளைத் தரும். அறிதல் அறிவின் செயலாகும். அப்படி அறிவின் துணைகொண்டு அறியப் புகுந்த ஒருவன், ஒரு பிறவியில் இல்லாமல் பிறவிதோறும் இதனையே தொழிலாகக் கொண்டு அறிய முற்பட்டாலும் அது நடவாத காரியம் என்பதை மன்னுயிர்க்கு அருமை என்றார். மன்னுயிர்