பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 இ. அ.ச. ஞானசம்பந்தன் மட்டும் இன்றும் தொடர்கின்றனவே! ஆதி மனிதன் இருளைக் கண்டு அஞ்சினான்; விலங்குகளைக் கண்டு அஞ்சினான்; ஏனைய மனிதர்களைக் கண்டு அஞ்சினான். இருளை ஒளியாக மாற்றிவிட்டோம்; விலங்குகளை காட்டுக்குள்ளேயே தங்குமாறு செய்து விட்டோம். ஆனால் மனிதன் மற்றொரு மனிதனைக் கண்டு அஞ்சும் நிலை இன்னும் மாறவில்லையே! சமுதாயத்திற்குள்ளேயே ஒருவரைக் கண்டு ஒருவர் அஞ்சுகிறோம். ஒர் ஊரார் மற்றோர் ஊராரைக் கண்டு அஞ்சுகின்றனர். ஒரு நாடு மற்றொரு நாட்டைக் கண்டு அஞ்சுகிறது. உலகம் முழுவதுமே அணுகுண்டைக் கண்டு அஞ்சுகிறது. ஆம். ஆதி மனிதனைவிட நாம் மிக வளர்ந்துவிட்டோமல்லவா! எனவே மூன்று பொருளின்மேல் அவனுக்கிருந்த அச்சம் இன்று வளர்ந்து எதிலும், எல்லா இடத்திலும், எந்த நேரமும் குடிகொண்ட அச்சமாக மலைபோல் வளர்ந்துவிட்டது. ஆதிமனிதன் கவலை மிகச் சிறிய அளவில், உணவு, குடும்பம் என்பவற்றோடு நின்றுவிட்டது. இன்று நம்முடைய கவலை, உலகத்தைவிடப் பெரி தாக வளர்ந்துவிட்டது. எது எப்படியானாலும் அறிவுத் துறையில் ஆதி மனிதனைவிடப் பலகோடி மடங்கு வளர்ந்துள்ள நாம் மனம், உணர்வு, உணர்ச்சி என்பவற்றில் ஆதி மனிதன் இருந்த அதே நிலையில்தான் இருக்கிறோம். இந்த அடிப்படையை நன்கு அறிந்துகொண்ட வள்ளுவப் பேராசான் மிக அற்புதமாக முதற் குறளை அமைக்கின்றார். மனித சமுதாயம் முழுவதற்கும் பொதுவான சிலவற்றை இதில் தொகுக்கின்றார்.