பக்கம்:முல்லைக்கொடி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 இ. புலவர் கா. கோவிந்தன்

கடப்பமரக் கிளைகளிலும் சிக்குண்டு தொங்கின. ஆலின் கீழும், கடம்பின் கீழும் கோயில் கொண்டிருக்கும் கடவுள்களை வழிபடுவார்கண், அம் மரக் கிளைகளில் சுற்றிய மலர் மாலைகள் போல் காட்சி அளித்தன அக் குடர்கள்

பல நாட்களாகப் பிரிந்திருந்த தம் கணவன்மார் வந்து சேரக் கண்டு, ஆய்ச்சியர் நனிமிக மகிழ்ச்சி கொண்டனர். மகிழ்ச்சி மிகுதியால் தம் கணவன்மார் கேடின்றி மீளத் துணை புரிந்த திருமாலை வழிபடக் கருதினர். உடனே, ஊர் மன்றில் ஒன்று கூடிக் குரவை யாடத் தொடங்கினர்.

"தோழி! கொல்லேறு பாய்ந்து புண் பெற்றுவிட்டது என் கணவன் மார்பு; அப்புண் தீர்க்கும் அரிய மருந்தாகிப் பயன்படும் பெருமை, என் மார்பு தரும் வெப்பத்திற்கு உரித்து. அதனால் தோழி! அவர் மார்பும், என் மார்பும் ஒன்று கலக்குமாறு அவரை இறுக அனைத்துக் கொள்வேன்!” எனக் கூறிப் பாடினாள் ஒரு பெண்.

மனையிற் கிடந்து மனைக்குரிய கடமைகளை மேற் கொள்வது காதலி கடமை; புறத்தே சென்று பொருளிட்டி மீள்வது காதலன் கடமை என்பதை உணர்ந்தவள் ஒருத்தி, "தோழி! நெடிது பொழுது நின்று தயிர் கடைந்தமையால் என் மார்பில் புள்ளி புள்ளியாகத் தெறித்துக் கிடக்கும் தயிரும், கொல்லேறு தழுவுங்கால், என் கணவன் மார்பில் அதன் கோடுபட்டு உண்டான புண்ணினின்று பெருகிப் பாயும் குருதியும் ஒன்று கலக்குமாறு, கணவன் மார்பைக் கட்டித் தழுவிக்கொள்வேன்!” எனக் கூறிப் பாடினாள் ஒரு பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/110&oldid=707954" இலிருந்து மீள்விக்கப்பட்டது