பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

சுலட்சணா காதலிக்கிறாள்

“என் பெற்றோர்களைப் பொறுத்தமட்டில் இதற்கு அவசியமே இராது மிஸ்டர் கனகராஜ்! என் தந்தையைப் பொறுத்தவரை அவர் பொது நன்மையில் சொந்த நன்மைகளைக் கரைத்தே வாழ்ந்தவர். மற்றவர்கள் போராடும் போது மார்க்குகளுக்காகப் பயந்து ஒதுங்குகிற மகளே அவர் விரும்ப மாட்டார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”

“எனக்குப் போராட்டங்கள், உண்ணுவிரதங்கள் எல்லாம் அறவே பிடிப்பதில்லை. கல்விக்கூடங்களுக்குள் அரசியலைக் கொண்டு வரும் வீண் வம்பு வேலைகள் இவை.”

“ஹஸ்டல் ஃபீஸ் என்று மாதா மாதம் ஏராளமாகப் பணம் கறந்துவிட்டுக் குளியலறையில் சொட்டுத் தண்ணீர் கூட வர வழியில்லாமல் கிணற்றடியில் திறந்த வெளியில் பிறர் வேடிக்கை பார்க்கும்படி குளிக்கச் சொன்னால் யார் தான் போராடாமல் இருப்பார்கள்? கடமைகளேச் செய்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உரிமைகளுக்காகப் போராடுவதும். உரிமைகளுக்காகப் போராடாதவர்கள் மனிதர்களே இல்லை”.

“படிக்கிறவர்களுக்குப் பணிவும் கல்வி நிறுவனத்தின் மேல் மரியாதையும் வேண்டும் என்கிறேன் நான்.”

“எந்தப் பணிவும், எந்த மரியாதையும் ஒரு வழிப்பாதை யில்லை. மரியாதையற்றவர்கள் மேல் செலுத்தும் மரியாதை அவமானகரமானது என்று நினைக்கிறவள் நான்”-

“இந்தப் போராட்டத்தின் மூலம் நன்றாகப் படிக்கிற மாணவியாகிய நீங்கள் ‘ரேங்க்’ வாங்கும். வாய்ப்பை இழக்கப் போகிறீர்கள்”

இதைக் கேட்டுச் சுலட்சணாவுக்குக் கோபமே வந்து விட்டது.