பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

15



"இந்த வம்புக்குப் பதிலாகக் 'காலனி நிலம் நாடுவோர் சங்கம்’னு பேரையே மாத்திட்டா என்ன?’’-இது புலவர்.

மறுபடி சிரிப்பலைகள். கூட்டத்தில் தம்மால் மட்டுமே. ஹ்யூமர் ஜெனரேட் ஆகிறது என்பதில் புலவருக்குப் பிடிபடாத மகிழ்ச்சி.

தலைவர் மீண்டும் விவாதம் நினைவுக்கு வந்தவராக, "மேற்கு கிராஸ் முதல் தெரு பதினொன்றாம் நம்பர் வீட்டுப் பெண் உறுப்பினராகிய அம்மிணி அம்மா..."

"சார்! தயவு செய்து 'பெண்மணியாகிய' என்று மட்டும் சொல்லுங்க...உறுப்பினர் வேண்டாம்..."

"அம்மிணி அம்மா நம் காலனி நலனுக்கு எந்த வகையில் கேடு விளைவிப்பவராக இருக்கிறார் என்பதைக் கண்ணன் இப்போது சொல்லியாக வேண்டும்."

"மன்னிக்கணும்! இந்த மாதிரி ரசாபாசமான விஷயங்களைக் கூட்டத்திலே வச்சுச் சொல்றது சிரமம்."

கண்ணன் இப்படிக் கூறியதைக் கேட்டவுடன் எல்லாருடைய ஆவலும் தூண்டப்பட்டு மனத்தின் விளிம்பு வரை ததும்பி வந்து நின்றது,

"அப்படியானால் கண்ணன் அந்த விவரத்தைத் தலைவரிடம் மட்டும் தனியாகக் கூறி விளக்க முடியுமா?’’

"கூடாது! முடியாது! இதை நான் வன்மையாக ஆட்சேபிக்கிறேன். காலனி நலனுக்குக் கேடு உண்டாக்கும் ஒரு விஷயம் எல்லாச் செயற்குழு உறுப்பினர்களுக்கும் தெரிய வேண்டுமே ஒழியத் தனியே தலைவருக்கு மட்டும்தெரிவிக்கப் பட வேண்டும். என்பது எந்த வகையிலும் நியாயமாகாது."