பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

சுலட்சணா காதலிக்கிறாள்


துணை நின்று உதவாமல் ஓடி வந்து விட்டதற்காகத் தவறாக நினைக்காதே. வீராசாமியின் ஆஸ்பத்திரிச் செலவுகள் போன்றவற்றுக்கு உபயோகமாக இருக்குமென்று இதனே இதனோடு ஓர் ஆயிரம் ரூபாய்க்குச் ‘செக்' இணைத்திருக்கிறேன்! உன் கோபம் ஆறுவதற்கு முன் உன்னை நேரில் வந்து சந்திக்கப் பயமாயிருக்கிறது. இரண்டு நாளில் பார்க்கிறேன்" என்று கடிதம் சொல்லியது. கடிதத்தைப் படித்ததும் தரையில் காறித் துப்பினாள் அவள்.

இதைப்படித்ததும் அவளுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது. அதே கடிதத்தின் பின்பக்கத்தில், “உங்கள் அநுதாபம் எனக்கோ வீராசாமிக்கோ தேவையில்லை. அநுதாபம், செக் எல்லாவற்றையும் திருப்பி அனுப்பியுள்ளேன். அதோடு உங்களுக்குத் தினசரி பூசிக்குளிக்கவும் அணிந்து கொள்ளவும் உபயோகமாக இருக்குமென்று இரண்டு மஞ்சள் கிழங்குகளும் அரைடஜன் கண்ணாடி வளையல்களும் அனுப்பியுள்ளேன். பெற்றுக் கொள்ளவும்" - என்று எழுதி அறைக்குப்போய் இரண்டு மஞ்சள் கிழங்கும் பெட்டியில் சொந்த உபயோகத்துக்காக வாங்கி வைத்திருத்த புது வளையல்களில் ஆறையும் ஒரு பழைய அட்டைப்பெட்டியில் அடுக்கி அழகாக கிஃப்ட் பொட்டலம் போலக் கட்டி அந்தப் பையனிடம் கொடுத்து அனுப்பினாள் சுலட்சணா.

‘இவனைப்போன்றவர்கள் பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்திருக்கலாம். யூனிவர்ஸிட்டி ரேங்க் வாங்கலாம். மன்மதனைப் போல அழகாயிருக்கலாம். அழகான ‘எஸ்கேப்பிஸ்ட்'டுகளைவிடக் குரூரமாகத் தோன்றும் தைரியவான்கள் எவ்வளவோ மேல். வீராசாமி அழகனில்லை, பணக்காரனில்லை. மாநிலத்திலேயே பின்தங்கிய பகுதியில், பின்தங்கிய வகுப்பில், வறண்ட பிரதேசத்தில் பிறந்தவன். பிரைட்டான மாணவன்கூட இல்லை. மந்தமான சராசரி மாணவன். ஆனால் ஆண்மையாளன்.

தவறு செய்கிறவன் எத்தனை வலிமையானவனாக இருந்தாலும் அவனை எதிர்த்துக் கையை ஓங்கி முஷ்டியை மடக்கிக்கொண்டு எழுகிறவன். நாளைய இந்தியாவுக்கு இப்படிப்பட்ட ஆண்மையாளர்கள்தான் தேவை. ஆணின்