பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

சுலட்சணா காதலிக்கிறாள்

 அவன் எவ்வளவுதான் நன்றாகப் படித்தாலும் எத்தனை அழகாயிருந்தாலும் என்னதான் ரேங்க் வாங்கினாலும் எப்படி விரும்புவார்கள்? பெண் விரும்பி ஆசைப்பட்டு வசியமாவ தற்கு ஒருவன் நல்லவனாக மட்டும் இருந்தால் போதாது. வல்லவனாகவும் இருக்கவேண்டும். -

கனகராஜ் நல்லவன். பயந்த சுபாவமுள்ளவன். தான் உண்டு தன் வேலை உண்டு என்று கச்சிதமாக இருப்பவன். ஊர் விவகாரங்களில் எல்லாம் தலையிட்டு வீணில் பெயரைக் கொடுத்துக்கொள்ளாதவன். இவை எல்லாம் பொதுவாகப் பார்த்தால் மிக மிக நல்ல குணங்களாயிருக்கலாம். ஆனால் சமூகப் பிரக்ஞை நிறைந்த சுலட்சணாவைப்போன்ற நவீன காலத்து இளம்பெண் ஒருத்தி ஒருவனை வெறும் அம்மாஞ்சித் தனமானவனாக நினைப்பதற்கு இந்தக் குணங்களே போதுமானவை'-என்று யோசிக்கும் வேளையில் சுகவனத்துக்குத் தெளிவாகவே விளங்கியது.

கோழைகள் காதலிக்கவும் முடியாது. காதலிக்கப் படவும் முடியாது. கரையில் தயங்கி நிற்பவர்களை விடப் பயப்படாமல் நீரோட்டத்தில் குதித்து ஆழங்களில் அநாயாசமாக முக்குளித்து எதிர்நீச்சலடித்து மேலெழுபவர்களையே பெண்கள் முகமும் அகமும் மலரப் பார்க்கிறார்கள். நீரில் இறங்கப் பயந்து ஆழங்களில் மூழ்க அஞ்சி ஒதுங்கி நிற்பவர்களை அவர்கள் ஆண்களாகவே பொருட்படுத்துவது இல்லை.

கனகராஜைப் போல உடம்பில் அழுக்குப்படாமல் வாழ விரும்பும் சொகுசு இளைஞன் சுலட்சணாவைக் கவராமல் போனதில் எந்த வியப்புமில்லை. நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி நிற்கிற அப்பாவி இளைஞனை எந்தப் பெண்ணும் ஆசைப்படமாட்டாள்தான். சுயமரியாதையுள்ள ஆண்பிள்ளையைத்தான் தன்மானமுள்ள ஒவ்வொரு புதுமைப் பெண்ணும் காதலிக்கிறாள். காதலிப்பாள். காதலிக்கவும் முடியும். -