பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

முள்வேலிகள்

காரியம்தான். பள்ளிக்கூடம் போய் வரும் பத்து வயதுச் சிறுமி கலாவுக்கு ஒரு பட்டுப் பாவாடை எடுத்துத் தர வேண்டும் என்று அவள் கெஞ்சி-இரண்டு மூன்று பிறந்த நாள்களும் ஒடிவிட்டன. வாங்கிக் கொடுக்க முடிய வில்லை. ஹவுஸிங் போர்டு ஒதுக்கிய வீட்டிலேயே உட் பகுதியில் சமயலறை மேடை, குளியலறை இவை எல்லாம் சரியாயில்லே. சுவர்களில் இரண்டொரு பகுதி உப்புப் பரிந்து சதா ஈரமாகச் சொத சொத என்று காட்சியளித்தது. சிரம தசையைக் கருதி அதை எல்லாம்கூட அப்புறம் எப்போதாவது சரிப்படுத்திக் கொள்ளலாம் என்று விட்டு வைத்திருந்தவன். இதில் மட்டும் அதிக பட்ச அவசாமும் ஆத்திரமும் காட்டியிருந்தான். கண்ணனின் மனைவி சுகன்யாவுக்கே இதில் தாங்க முடியாத மனவருத்தம் இருந்தாலும் அவள் அதிகம் தலையிடவில்லை.

கண்ணன் வீட்டில் இல்லாத நேரத்தில் அம்மிணி அம்மாவே சுகன்யாவைக் கூப்பிட்டு ஒரு யோசனைகூடச் சொன்னாள்: "உங்க வீட்டுக்காரர் எதுக்கும்மா தான் மட்டும் சிரமப்பட்டுச் செலவழிச்சுக் கஷ்டப்பட்டுக் காம்பவுண்டுச் சுவர். எடுக்கணும்? எங்கிட்டக் கொஞ்சம் முன்னாலேயே கலந்து பேசியிருந்தர் ஒரு பக்கத்துச் சுவருக்கான செலவை நான் ஒத்துப்பேனே? அதே போல அந்தப் பக்கத்திலே பாகவதரிடம் பேசிப் பார்த்திருந்தா அவர் இன்னொரு பக்கத்துச் சுவரை ஒத்துக்க வைச்சிருக்கலாம். உங்களுக்கு முன்பக்கம்-பின்பக்கச் சுவர்ச் செலவு மட்டும் மிஞ்சியிருக்கும்! இத்தனை செலவு ஆகியிருக்காதே?”

"இதைப் பத்தி அவர் எங்கிட்டக்கூட எதுவும் சொல்லலேம்மா!” திடீர்னு ஏதோ நினைச்சார். கொத்தனாரைக் கூட்டிக் கொண்டுவந்து வேலையை ஆரம்பிச்சிட்டார்" என்று அம்மிணி அம்மாளிடம் பூசி மெழுகினற்போலப் பதில் சொல்லி வைத்தாள் சுகன்யா ஏதாவது பதில் சொல்லியாக வேண்டுமே?