பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

37

"நானும் பார்த்தேன்! யாரோ கொண்டுவந்து காமிச்சா...வருத்தப்பட்டேன்."

"நீங்க எதுக்கு அநாவசியமா வருத்தப்படணும்? நானே இதற்காக வருத்தப்படலியே..?"

"மனிதர்களின் வயிற்றிலடிக்கிறாப் போலப் பிழைப்பைக் கெடுக்கிற மாதிரி எழுதறதை நான் வெறுக்கிறேன்."

இதைக் கேட்டுப் பாகவதர் சிரித்தார். "மிஸ்டர் கண்ணன்! இப்படியெல்லாம் எழுதறதாலே ஒருத்தரோட பிழைப்புக் கெட்டுப் போகும்னு நீங்க நினைக்கிறதே ஹைதர் காலத்து உத்தி. இந்தக் காலத்து சைகாலஜியே வேற மாதிரி. ஒருத்தனைப் பத்தி அவன் பரம யோக்கியன், ஏகபத்தினி விரதன், ஒழுக்க சீலன், பரஸ்திரீகளை ஏறிட்டும் பார்க்காத பரிசுத்தவான் அப்படீன்னெல்லாம் எழுதின அந்த யோக்கியன் யாருன்னு பார்க்க இன்னிக்கு நாலு பேர்கூட வரமாட்டா! அதே சமயத்தில் மூன்று பெண்டாட்டிக்காரன், குடிகாரன், கொலைகாரன், பெண் பித்தன், கஞ்சா அடிக்கிறவன், ஆள்மயக்கின்னு ஒருத்தனப் பத்தி எதிர் மறையா எழுதின அவன் யாருன்னும் எப்படியிருக்கான்னும் பார்க்க லட்சக்கணக்கிலே ஜனங்க கூடும். அததான் இந்தக் கால வெகுஜன மனப்பான்மை. அந்த வகையிலே இதிலே எழுதியிருக்கிறதெல்லாம் நிஜமில்லேனாலும் இதனாலே ஏற்கெனவே பிரபலமான நான் அடையப் போற பப்ளிசிட்டி அதிகம்தான். என பிழைப்புக்கு விளம்பரமும் வருமானமும் அதிகமாகுமே ஒழியக் குறைஞ்சிடாது. ஒன்பது பேரை ஒரே இரவில் கொலை பண்ணின ஜெயப்ரகாஷைக் கோர்ட்டுக்குக் கொண்டு வந்தப்போ அவனப் பார்க்கக் கூட்டம் அலைமோதித்து. தெரியுமோன்னோ?" .

"உங்களை ஏன் அவனோடு ஒப்பிட்டுக்கொள்கிறீர்கள்? "

"ஒப்பிடவும் இல்லை.? உபமானமாகச் சொல்லவும் இல்லை. சும்மா ஒரு வார்த்தைக்குச் சொன்னேன். அவ்வளவுதான்.

மு--8