பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

முள்வேலிகள்

 விழுந்திருந்தது. பாகவதர் கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்'-என்ற பழமொழியில் தொடங்கி ஆலயம் கட்டுவதன் அவசியத்தை வற்புறுத்தி ஒரு குட்டிப் பிரசங்கம் செய்தபின் திருப்பணிக்குத் தாராளமாகப் பொருளுதவி செய்யவேண்டும் என்று எல்லாரையும் வேண்டிக்கொண்டார். அவரே மேலும் கூறினார்: "என்னோட அபிப்ராயம் வெறும் பிள்ளையார் மட்டும் போறாது. ஒரு சின்ன குருவாயூரப்பன் சந்நிதியும், ஐயப்பன் சந்நிதியும் கூட வேணும். எல்லாருக்கும் பிரயோசனமாயிருக்கும். மலைக்குப் போறவாளுக்குப் பூஜை பண்ண வசதி. குருவாயூரப்பன் சந்நிதி சைவ வைஷ்ணவ பேதமின்றி இரு சாராருக்கும் தரிசனத்துக்கு ஏற்ற ஏற்பாடாயிருக்கும்."

இப்படிப் பாகவதர் கூறியதை அடுத்து உடனே அம்மிணி அம்மாள் எழுந்து, "பாகவதர் கூறியபடி குருவாயூர் கிருஷ்ணர் சந்நிதி ஐயப்ப சுவாமி சந்நிதிகளைக் கட்டி முடிக்க ஆகிற அவ்வளவு செலவையும் நான் ஏத்துக்கறேன்-" என்று கூறியபோது அதைப் பாராட்டி வரவேற்றுப் பலத்த கரகோஷம் அங்கே எழுந்தது.

அதன்பின் பேசிய பலரும் அம்மிணி அம்மாளின் தாராள மனத்தையும் பக்திப் பாங்கையும் பாராட்டிப் புகழ்ந்தனர். கூட்டத்தின் போக்கே திசை மாறி அவள் பக்கம் திரும்பிவிட்டது.

முடிவில் கண்ணன் அஸோஸியேஷனின் காரியதரிசி என்ற முறையில் பேரவைக்கு நன்றி கூறவேண்டும். பாகவதரையும், அம்மிணி அம்மாவையும் தன் வாயால் புகழும்படி ஆகிவிடக் கூடாதே என்று கண்ணனுக்கு ஒரே பதற்றம். மெல்லத் தான் நன்றி கூற நேராமல் தட்டிக் கழிக்க ஓர் ஏற்பாடு செய்தான். காலனி அஸோஸியேஷன் தலைவரிடம் போனான், "தலைவர் நீங்க இருக்கறப்ப நீங்க