பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

முள்வேலிகள்

"உஹும்! அதுலே வந்தப்புறம் தான் தனக்குப் பப்ளிஸிடி அதிகமாயிருக்குன்னு' பாகவதர் பெருமையாச் சொல்றாரு. அந்தம்மா கவலையே படலே..."

"அப்பிடியா? இன்னும் 'டோஸேஜ்' அதிகமாக்கணும் போல் இருக்கு. வரட்டும் 'மஸாஜ் பார்லர் விவகாரத்தை ஒரு பிடி பிடிக்கிறேன். அவனவன் இப்பிடி இலேசா ஒரு ஃபீலர் வீட்டாலே ஐயாயிரம், பத்தாயிரம் ரொக்கத்தை எடுத்துக்கிட்டு ஒடியாந்து, 'இதை வச்சுக்க! இனிமே என்னைப் பத்தி எழுதாதே... வுட்டுடு'ங்கறான். இந்த மலையாளத்துப் பொம்பிளைக்கும் இஞ்சிகுடிக் கஞ்சித் தொட்டிக்கும் இத்தினி திமிரா? பார்த்துடறேன் ஒரு கை."

இதில் நண்பனின் சுயரூபம் ஒரளவு புரிந்தாலும் கண்ணனால் அவனை அறவே கத்திரித்துக் கொள்ள முடியவில்லை. பாகவதர், அம்மிணி அம்மா விரோதத்தில் அவர்களை எதிர்க்க உதவியாயிருக்கும் புலவர் மகிழ்மாறன், உண்மைவிளம்பி நண்பன், எல்லாரையுமே அரவணைத்துக் கொண்டுதான் போக வேண்டியிருந்தது. குறுகிய நோக்கங்களிலும் மொழி இன வெறுப்புக்களிலுமே காலந்தள்ளிய மகிழ்மாறனும் சரி, பிளாக் மெயிலை நாசூக்காகச் செய்து பிழைத்து வந்த உண்மைவிளம்பி நண்பனும் சரி, முழுமையான மனிதர்களாகக் கண்ணுக்குத் தோன்றவில்லை என்றாலும் கண்ணன் அப்போது அவர்களைத் தட்டிக் கொடுக்க வேண்டியிருந்தது.

மின்சார லைன் தகராறு நடந்த தினத்தன்று மாலையே வல்வழக்குகள் போடுவதில் செஞ்சுரி போட்ட ஒரு வம்புக்கார வக்கீலிடம் கண்ணனை அழைத்துப் போய்ட்டான் நண்பன். அந்த வக்கீல்தான் உண்மை விளம்பியின் சட்ட ஆலோசகராம்.

கண்ணன் அவரிடம் மின்சாரத் தகராறு பற்றி எல்லாவற்றையும் விவரித்ததும் அவரே பொய்யாக ஒரு கேஸை ஜோடித்துச் சொன்னார்.