பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா

85

"என்ன சங்கதி? இப்படிக் குடி படைகளோட காலங்கார்த்தாலேயே வந்து நிக்கிறீங்க?"

"அ. அ. க. வசூல் இன்று முதல் தொடங்குகிறோம். நிறைய உறுப்பினர் சேர்த்தாகணும். நாம ரெண்டு பேர் மட்டும் உறுப்பினரா இருந்தாப் போதாது."

"அதுக்கு நான் என்ன செய்யணும்? சொல்லுங்க!"

"ஒண்ணும் செய்யவேண்டாம்! சும்மா என் கூட வாங்க. போதும். மத்ததெல்லாம் நாங்க பார்த்துக்கிரறோம். தலைவர் நீங்கதான்னு உங்களைக் காண்பித்தே வசூல் பண்ணிடுவேன்."

புலவரோடு தானும் சேர்ந்து பகிரங்கமாக மற்றவர்கள் முன் போய் நிற்பதில் கண்ணனுக்கு நிறையத் தயக்கங்கள் இருந்தன. தன் பக்கத்தில் கூட நிற்கிற ஆளை உடனே மரியாதை இழக்கச் செய்கிற மகத்தான திறமை புலவருக்கு இருப்பதைக் கண்ணன் உள்ளூர அறிந்திருந்தான். ஏன், அநுபவித்தே இருந்தான். அவர் தொடங்கிய தமிழர் தன் மானப் படைக்கு ஒரு பத்து ரூபாய் நன்கொடை எழுதிக் கையெழுத்துப் போட்டதால் காலனி முழுவதும் தன் பெயரே ரிப்பேர் ஆகிப்போனதைக் கண்ணன் இன்னும் மறக்கவில்லை. மெல்லத் தட்டிக் கழிக்க முயன்றான கண்ணன்.

"நான் எதுக்கு? நீங்களும் உங்க கூட வந்திருக்கிற இந்தத் தம்பிகளும் போனாலே போதுமே."

"இல்லீங்க! நீங்க கண்டிப்பா வரணுங்க! அதுனாலே நம்ம எதிரிங்க இரண்டு உண்மைகளைப் புரிஞ்சப்பாங்க. ஒண்ணு, நீங்க வெளியேறினதாலே அவங்களுக்கு வந்த நஷ்டம். இரண்டு, புதுச் சங்கத்துக்கு லாபம். உங்களைப் போல ஒரு சிங்கத்தை வெளியேற்றிய சிறுநரிகளான அவங்க, நீங்க சும்மா இல்லே புதுச் சங்கம் தொடங்கியிருக்கிங்கன்னும் புரிஞ்சுப்பாங்க."

"இதென்ன புலி, நரி, பூனை அது இதுன்னு நாம மிருகக் காட்சி சாலையா நடத்தறோம்? நமக்குப் பிடிக்காதவங்கன்னாலும் அவங்களும் மனுசங்கதான் புலவரே!"

மு--6