பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா,

93

கவனமாகப் பழகுவாள் என அவன் எதிர்பார்த்திருந்தான். ஆனால் அவள் எப்போதும் போல்தான் இருக்கிறாள் என்பது இன்று அவனுக்கே நிதர்சனமாகப் புரிந்து விட்டது. அவனுள் ஆத்திரம் மூண்டது.

"உங்க வீட்டுக்காரர் வாசலில் வந்து காத்திருக்கிறாரம்மா" என்று அந்த வேலைக்காரி போய்ச் சொல்லியிருந்ததாலோ என்னவோ சிறிது நேரத்தில் சுகன்யா குழந்தை கலாவுடன் பக்கத்து வீட்டிலிருந்து வெளியேறி வந்தாள்.

"ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா? நீங்க இவ்வளவு சீக்கிரம் வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கல்லே?"

"எத்தனை நாளா இந்தக் குலாவல்?"

"உள்ளே வந்து பேசுங்க... தெருவிலே ஏன் சத்தம் போடணும்?"

"நடுத் தெருவிலே கூடச் சத்தம் போடுவேன். அவங்க வீட்டிலே வந்துகூடக் கூப்பாடு போடுவேன்! எனக்கென்ன பயமா?"

தன் கணவன் எதற்காக இப்படி வெறி கொண்டவன் போல் கத்துகிறான் என்று அவளுக்குப் புரியவில்லை. முன்பெல்லாம் காம்பவுண்டுச் சுவர்கள் இல்லாததால் காதும் காதும் வைத்தாற் போல் பின்பக்கமாகப் போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தாள் அவள். காம்பவுண்டுச் சுவர் எடுத்துத் தடுத்த பிறகு அது முடியாமல் போய்விட்டது" பகலில் வீட்டு வேலைகள் எல்லாம் முடிந்தபின் பொழுது போக வேண்டும் என்று இந்தப் பக்கம் பாகவதர் வீட்டிலோ அந்தப் பக்கம் அம்மிணி அம்மாள் வீட்டிலோ பேசப் போனால் கூடாதென்று அதற்குத் தடை உத்தரவு, தடுப்புக் காவல் சட்டம் எல்லாம் போட்டால் என்ன செய்வது? இருபத்து நாலு மணி நேரமும் சிறை வைத்தாற் போலக் குழந்தையும் தானுமாக வீட்டிலேயே அடைந்து கிடக்கவா முடியும்? அப்படி என்ன அக்கம்பக்கத்து வீட்டார் இவர் தின்கிற