பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


1

கிழக்கும் மேற்கும்


ஈராயிரத்து ஐநூறு ஆண்டுகட்கு முன்னரே, தமிழகத்திற்கும் கிரேக்க, உரோம, பாபிலோனிய, பாரசீக, அரபு நாடுகளுக்குமிடையே நல்ல வணிகத் தொடர்புகள் இருந்ததை வரலாற்றுக் குறிப்புகள் விளம்புகின்றன. நமது நாட்டின் தள்ளாவிளையுளை பண்டமாற்றிலே பெற்றுக் கொண்ட மேனாட்டு வணிகர்கள், அவைகளுக்குப் பகரமாக தங்கள் நாட்டின் புதுமைப் பொருட்களை தமிழ்நாட்டிற்கு வழங்கினர். தமிழகத்தின் அகிலும் துகிலும், பருத்தியணியும் பவளமணியும், முத்தும் மிளகும், மேனாடுகளில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டன.[1] கிரேக்க நாட்டு மதுரசங்கள், கண்ணாடிக் கலசங்கள், ஈயம் தகரம், ஆகியவைகளும் தங்க, வெள்ளிக் காசுகளும் தமிழர்களைக் கவர்ந்தன. எகிப்து நாட்டுக் கடற்பட்டினமான அலக்ஸாந்திரியாவை மையமாகக் கொண்டு அரபு நாடுகள் வழியாக, கீழ்நாடுகளுக்கும், பாலத்தினம் வழியாக கிரேக்க நாட்டிற்கும், வணிகச் சாத்து வழிகள் சென்றன.[2]

இவை வரலாற்றின் கால வரம்பிற்குட்படாத காலந்தொட்டு இருந்து வந்ததை விவிலியம் (பைபிள்) சான்று பகர்கின்றது. கி.மு. 1000-ல் ஸிரியா நாட்டில் மதி மன்னனாக விளங்கிய ஸாலமன், ஜெருஸேலம் நகரில் அமைத்து இருந்த பிரம்மாண்டமான, தேவாலயத்தைக் காண்பதற்குச் சென்ற ஏமன் நாட்டு ஷேபா அரசியார், அந்த மன்னனுக்கு தென்னாட்டில் சிறந்த


  1. William Robestson - An Historical Disquisition (1791) page 8
  2. Stabout J.W.H.-islam (1881) page 2