பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

மாக போர்ச்சுகல் நாட்டாரது நடமாட்டம் தெற்கு கடற்கரையில் அதிகமாகிறது. அவர்களது ஆயுதபலமும், கொடுரமான நடவடிக்கைகளும் மக்களுக்கு அச்சத்தை ஊட்டியது. ஆனால் கேரள கடற்கரை முஸ்லீம்கள், இந்த மனிதப் பிசாசுகளுக்கு பயப்படாமல், அவர்களுடன் பொருதி போராடி வந்தனர். அந்த மாவீரர்களது போராட்டக்களமாக கிழக்கு கடலின் மன்னார் வளைகுடாவும் விளங்கியது.

அப்பொழுது இலங்கையில் இருந்த மூன்று அரசுகளில் கோட்டை என வழங்கப்பட்டதும், கொழும்பை தலைநகராகக் கொண்டிருந்ததுமான அரசுக்கு இரண்டு சகோதரர்கள் போட்டியிட்டனர். அவர்களில் புவனேகபாகு என்ற மூத்தசகோதரருக்கு போர்ச்சுகீசியர் ஆதரவு கொடுத்து வந்தனர். இன்னொரு இளவரசரான மாயதுன்ன பண்டாராவிற்கு கோழிக்கோடு அரசர் ஸாமரின் ஆயுத உதவி வழங்கி வந்தார்.[1] கி.பி. 1534ல் இலங்கை சென்ற கப்பல் அணிக்கு தலைமை தாங்கிய ஸாமரின் மன்னரது தளபதி குஞ்சாலி மரக்காயர், பல இடங்களில் பரங்கிகளை எதிர்த்து அழித்தார். மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் கோழிக்கோட்டில் இருந்து புறப்பட்ட பெரும் கப்பல் படையை குஞ்சாலி மரைக்காயர், அவரது தம்பி அலி இபுராகில் மரைக்காயர் அவரது மைத்துனர் அகமது மரைக்காயர் ஆகியவர்கள் நடத்திச் சென்றவர். அந்த அணி, ஐம்பத்து ஒரு கப்பல்களும் இரண்டாயிரம் வீரர்களும் ஐநூறு பீரங்கிகளும் அடங்கியதாக மதிப்பிடப்படுகிறது. கன்னியாகுமரிக்கருகில் பரங்கிகளை வெற்றி கொண்ட அவர்கள், கொழும்பிலிருந்து தகவலை எதிர்பார்த்து வேதாளைக்கருகில் காத்து இருந்தனர். இதனை அறிந்த மார்ட்டின் அல்போன்ஸா என்ற போர்ச்சுகல் தளபதி அறுநூறு கப்பல் படை வீரர்களுடன் விரைந்து சென்று அவர்களைத் தைரியமாகத் தாக்கினான். இராமேசுவரத்திற்கும் வேதாளைக்கும் இடையில் கடலில் 28-2-1538ல் நிகழ்ந்த இந்த உக்கிரமான போர் இந்திய கடற்போர் வரலாற்றில் ஒரு சிறந்த ஏடாக விளங்கியது.[2] கடற்போரில் வல்லவர்களான போர்ச்சுகன் பரங்கிகளிடம் கடல் வணிகரான இசுலாமியரது வீரம் எடுபடவில்லை.


  1. Fr. Pereira History of Ceylon – p.p. 23.24
  2. Whitevvay - Rise of Portughece Povver in India (1899)