பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

109

வசூலித்தது ஆகிய அக்கிரமச் செயல்களுக்காக அவர்களை அழித்து ஒழிப்பது என்பது வித்தலராயரின் முடிவு. ஆதலால் ஸாமரின் மன்னரது கடல்படை, மன்னார் வளைகுடாவில் கடலில் மோதும்பொழுதும் வித்திலராயரது வடுகர்படை கடற்கரைப்பகுதிகளில் உள்ள போர்ச்சுகீஸியரையும் அவர்களது கோட்டையான காவலைத்தாக்கி அழிப்பது என்பது திட்டம்.

மே 1553ல் கோழிக்கோடில் இருந்து இராப் அலி தலைமையில் வந்த நாற்பது கப்பல்கள் தூத்துக்குடிக்கு அருகில் உள்ள முசல்தீவைத்தாக்கி அங்கிருந்த ஏராளமான பரவர்களையும் இருபது மீன்பிடி வள்ளங்களையும் கைப்பற்றினர். பின்னர், இராப் அலி அணியில் உள்ள ஐநூறு இசுலாமிய வீரர்கள் புன்னைக்காயல் கோட்டையை தாக்கிப்பிடித்தனர். தப்பி ஓடிய போர்ச்சுக்கீசிய தளபதியையும் வீரர்களையும் எதிர்ப்புறத்தில் தாக்கிய வடுகர் படை கைப்பற்றியது. இந்த சோகச் செய்தியை கேள்வியுற்ற போர்ச்சுகீசியத் தலைமை கொச்சியில் இருந்த கப்பல்படை ஒன்றை அனுப்பி வைத்தது. புன்னைக்காயலுக்கு வந்து சேர்ந்த அந்த அணி அப்பொழுது வடக்கே, கீழக்கரை அருகில் நிலை கொண்டு இருந்த இராப் அலி அணியுடன் கடுமையான கடல்போரில் மோதியது. போர்சசுக்கீசியர், இராப் அலியின் உக்கிரமான தாக்குதலைச் சமாளிக்க இயலாமல் சற்று தொலைவில் உள்ள தீவுகளுக்குள ஒடி ஒழிந்தனர். அந்நிய ஆக்கிரமிப்பாளருக்கு தோல்வி. ஆனால் வெற்றியைக் கண்ட மாவீரன் இராப் அலி, போரில் தழுவிய பயங்கர காயங்களினால் உயிர் துறந்தார்.[1] தியாகி குஞ்சாலி மரக்காயரது நீண்டகால ஆசையை நிறைவேற்றிய மன நிறைவுடன் போர்ச்சுக்கீசிய பரங்கிகளது அக்கிரம ஆதிக்கம் அழியத்துவங்கியதின் அறிகுறிதான் அந்தப்போர். ஒரு நூற்றாண்டுகாலம், மன்னார் வளைகுடா பகுதியைத் தங்களது சொந்த சொத்தாக பாவித்து வந்த போர்த்து கேஸியர் கி.பி. 1658ல் புயல் காற்றில் எழுந்த புழுதியைப் போல அந்தப் பகுதியில் இருந்து மறைந்தனர்.


  1. Krishnasamy Dr. A.—Tamil Country under Vijayanagar Rule i. (1964) p. p. 240 : 241