பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

நவாப் வாலாஜா முமம்மது அலி, கம்மந்தான் கான்சாகிபிற்கு பொன்னால் ஆன தட்டு ஒன்றையும் அற்புதமாக வடிவு அமைக்கப்பட்ட வாள் ஒன்றையும் பரிசாக அளித்து அவரது சேவையைப் பாராட்டினார்.

மதுரையின் ஆளுநர் என்ற முறையில் மிகக்குறுகிய காலத்தில் அரிய பல சாதனைகளைச் செய்தார். குறிப்பாக, மதுரைகரையும் அதனையடுத்த வடக்கு, வடக்கு கிழக்குப் பகுதியிலும் தங்களது பாரம்பரிய தொழிலான, திருடு, கொள்ளை போன்ற கொடுஞ்செயல்களினால் மக்கள் சமுதாயத்தை அலைக்கழித்து அவலத்துக்குள்ளாக்கி வந்த கள்ளர்களை ஈவு இரக்கமில்லாமல் அழித்தார். மேலூர், வெள்ளாளப்பட்டி ஆகிய ஊர்களில் கோட்டைகளை அமைத்து மக்களை கள்ளர் பயத்தினின்றும் காத்தார். மேலும், கள்ளர்கள் இயல்பான வாழ்க்கையில் ஈடுபட்டு உழைக்கும் வகையில், பல உதவிகளை அவர்களுக்கு செய்தார். அவர்களது கொடுஞ்செயல்களுக்கு படுகளமாக விளங்கிய காடுகளை அழித்து கழனிகளை அமைத்து விவசாயத்தைப் பெருக்கினார். அதற்கான கண்மாய்களையும் கால்களையும் செம்மைப்படுத்தினார். உள்நாட்டு வணிகம், சிறப்பாக நடைபெறுவதற்கு வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கியதுடன் ஆங்காங்கு வணிகர்கள் தங்குவதற்கு விடுதிகள் அமைத்துக் கொடுத்தார். நெசவாளர்களுக்கு முன்பணம் கொடுத்து அவர்களது தொழிலை விரிவுபடுத்த ஊக்குவித்தார். சாதாரண குடிமகனும் மேநாட்டு ஆயுதங்களான துப்பாக்கி, பீரங்கிகளை வடிக்கும் முறைகளையும் அவைகளுக்கான வெடிமருந்து பாரிப்புகளையும் தெரிந்து கொள்ளுமாறு செய்தார். மாதம் தவறாது திருவிழாக்கள் நடந்த மதுரை மாநகர் கோயில்களுக்கு வழங்கப்பட்ட "மான்யங்களை" கோயில் பணிகளுக்கு பயன்படுத்தாமல் சொந்தத்திற்கு பயன்படுத்திக்கொண்டதால் புறக்கணிக்கப்பட்ட கோயில் நடைமுறைகளை, திருவிழாக்களை,மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக மதுரை மீனாட்சி ஆலயம் போன்ற திருக்கோயில்களுக்கு அரசு மான்யம் வழங்கி, அவை பொலிவும் அழகும் பெறுமாறு செய்தார்.[1]

சுருங்கச்சொன்னால் கம்மந்தான் ஆட்சியில் நீதியும் நியாயமும் நிலைத்து தழைத்தது. கொடுமைகள் குற்றங்களும் மறைந்து அமைதி நிலவியது. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.


  1. Rajawan Dr K . History of Madurai (19724) P.P. 210: 211