பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


18

தமிழகம் வந்த அரபி பயணிகள்



தமிழகத்திற்கும் அரபு நாடுகளுக்கும் இடையில் கடந்த இருபது நூற்றாண்டுகளுக்கு மேலாக வணிகத் தொடர்புகள் இருந்து வந்தன. ஆதலால் வணிகர்களைத் தொடர்ந்து, இஸ்லாம் தோன்றிய ஏழாம் நூற்றாண்டு முதல் இசுலாமிய சமயச் சான்றோர்களும் தொண்டர்களும் தமிழகம் வந்தனர். அத்துடன் உலகியலை உணரவேண்டும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்ட பயணிகளும் வந்தனர். ஆங்காங்கு அவர்கள் சென்று, கண்டு கேட்டு வரைந்து, வைத்த பயணிக்குறிப்புகள், வரலாற்றின் சிறப்பு மிக்க ஏடுகளாக விளங்குகின்றன. தமிழகத்து அரசுகள், ஊர்கள், வாணிபப் பொருட்கள், மக்களது மரபுகள், பண்பாடுகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள அவை உதவுகின்றன.

இந்த ஆவணங்களை வரைந்துள்ளவர்களில் நால்வர் பாரசீகர்கள். நால்வர், பாக்தாதைச் சேர்ந்தவர்கள். இன்னும் நால்வர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களில் இபுனு குர்த்தாபே (கி.பி.844-48) இபுனு குஸ்தா (கி.பி.903) இபுனு பக்சி (கி.பி.902) அபூசெய்து (கி.பி.950) மசூதி (கி.பி.943-55) யாக்கத் (கி.பி. 1179) வஸ்ஸாப், ரஷிமுத்தீன், திமிஸ்கி (கி.பி.1325) இபுனு பத்தூதா (கி.பி. 1355) ஆகியோரது குறிப்புகளில் நமிழ்நாட்டைப் பற்றிய செய்திகள் ஓரளவு காணப்படுகின்றன. கடைசியாகக் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு பயணிகளது குறிப்புகள் தமிழகத்தைப் பற்றிக் கூடுதலான செய்திகளை வழங்குகின்றன.[1]


  1. Mohamed Hussain Nainar. Dr -Arab Geogrephers Knowledge of S. India (1942) P. 19, 20