பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

129

திமிஸ்கி என்ற பயணிதான் அப்பொழுது அரபி பயணிகள் பயன்படுத்தி வந்த மேற்குக்கரையின் கொல்லத்தில் இருந்து, கிழக்குக்கரையில் உள்ள முத்துப்பள்ளி(ஆந்திர நாட்டுக் கரையில் உள்ளது) வரையான கடற்கரை பட்டினங்கள் பற்றிய விவரங்களைத் தெளிவாகத் வரைந்துள்ளார். அவரது குறிப்புகளில் அதிரை (அதிராம்பட்டினம்) அபத்து எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிவீரராம பாண்டியன் (கி.பி. 1502-97) என்ற பிற்கால பாண்டியன் நினைவாக எழுந்த ஊர் இது என தஞ்சாவூர் கெஜட்டியர் குறிப்பிடுகிறது. ஆனால் இந்த பாண்டியனுக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கடல்துறை இருந்து வந்தது திமிஸ்கியின் குறிப்புகளில் இருந்து தெரிகிறது. மேலும், அவர், திண்டா (தொண்டி) தக்தான் (தேவிபட்டினம்) பத்தன் (பெரியபட்டினம்) காயின் (கானப்பேர்) என்ற காளையார் கோவில் ஆகிய ஊர்கள் மாபாரின் சிறந்த பட்டணங்கள் என குறித்துள்ளார். இன்னும் அவர் குறிப்பிட்டுள்ள பல ஊர்களை, இன்று இனங்கண்டு கொள்ள முடியவில்லை.

அடுத்து, உலகப் பயணியான இபுன் பதுாதா, இலங்கையில் இருந்து மாலத்தீவுகளுக்கு பயணம் செல்லும் வழியில் கடல் கொந்தளிப்பினால் அவரது கப்பல் கிழக்கு கரையில் ஒதுக்கப்பட்டு கி பி. 1355ல் கரையேறினார். பாண்டியநாட்டை நேரில் காணும் வாய்ப்பு அவருக்கு இவ்விதம் தற்செயலாக ஏற்பட்டது. அப்பொழுது, மதுரையில் ஆட்சி செய்த சுல்தான் கியாஸீதீன் தமகானி, தகவல் அறிந்து இபுனு பதூதாவை அரசு மரியாதையுடன் மதுரைக்கு அழைத்துக் கொண்டார். கப்பல் வசதி பெற்று அவர் பயணத்தை தொடர்வதற்கு பருவக்காற்று சாதகமாக இல்லாததால் இடைப்பட்ட மூன்று மாத காலத்தில் அவர் மதுரையிலும், பத்தனிலும்(பெரியபட்டினத்தில்)தங்கினார். அப்பொழுது அவர் வரைந்துள்ள விவரமான குறிப்புகள் தமிழக வரலாற்றிற்கு பயனூட்டுவதாக உள்ளன. அவைகளில் ஒரு பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.[1]

பத்தனுக்குச் சென்றதைப் பற்றி அவர் வரைந்திருப்பது...... "அந்த முகாமை விட்டு பத்தன் நகருக்குப் போய்ச் சேர்ந்தேன்"


  1. Neelakanta Sastri Foreign Notices of S, India (1972) р. 278