பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

சூழ்நிலை, சமூக அமைப்பு காரணமாக தங்களுக்கு இல்லாத பழக்க வழக்கங்களை வெறுத்து ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவைகளை அவர்கள் பொறுத்துக் கொள்ளவேண்டியது இயல்பாகிவிட்டது. வரலாற்று நிகழ்ச்சிகள் சில இதனை வலியுறுத்துகின்றன. பாண்டியன் சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி. 1262) ஆட்சிக்காலத்தில் இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரையில் உள்ள தீர்த்தாண்ட தானத்துக் கல்வெட்டில் “... ... ... .... இவ்வூரில் இருக்கிற அஞ்சு வண்ணமும் மணிக் கிராமத்தாரும். ஆரியரில் சாமந்த பண்டசாலையும் பட்டாரியரும் தோயா வத்திரச் செட்டிகளும் தென்னிலங்கை வலஞ்சியரும் கைக்கோளரும் தூசுவரும், வாணியரும், நீண்ட கரையாருங்கூடி .... ... கோயில் திருமுன்னிலே நிறைவுறக் கூடியிருந்து .... ...." அந்த ஊர் திருக்கோவிலில் திருப்பணி பற்றிக் கலந்து முடிவு எடுத்தனர்.[1] இந்த கலந்துரையாடலுக்கும் ஒரு மித்த முடிவிற்கும் இஸ்லாமியர்களான அஞ்சு வண்ணத்தவரும் கட்டுப்பட்டதாகத் தெரிகிறது. இது பதின்மூன்றாம் நூற்றாண்டில் மட்டுமல்ல. தொடர்ந்து பிந்தைய நூற்றாண்டுகளிலும் தமிழக இஸ்லாமியர் தாங்கள் வாழும் சமுதாயத்தை சேர்ந்த இந்து சகோதரர்களின் மத உணர்வுகளை மதித்தவர்களாக சமயப் பொறையுடன் வாழ்ந்தனர், என்பதற்கு இன்னும் இரண்டு கல்வெட்டுச் செய்திகள் இங்கு குறிப்பிடப்படுகின்றன.

முதலாவது, மதுரையில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சி நடைபெற்றபொழுது கி பி. 1719 ல் நிகழ்ந்த சம்பவம். மதுரை மாவட்டம் வெற்றிலைக்குண்டு கிராமத்தில் ஆலய மொன்றைப் பராமரிப்பது சம்பந்தமாக அந்த ஊரின் குடிகளான கோமுட்டி, கவண்டன், கைக்கோளன், நாடார், வாணியர், செட்டி, நத்தமடை, இஸ்லாமியர் ஆகிய எட்டு சமூகங்களின் பிரதிநிதிகளும் கூடிய கூட்டத்தில் தங்களது வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தில் ஒரு ஈவுத் தொகையை அந்த தர்மத்திற்கு அளிக்க ஒவ்வொரு சமூகத்தினரும் உடன்பட்டதாலும், அந்த எட்டு சமூகப் பிரதிநிதிகளில் இஸ்லாமியரது பிரதிநிதி


  1. AR 598/1926 தீர்த்தாண்டதானம்