பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148


இவர்களைப்போன்று, தமிழக இஸ்லாமியரிடம் பரிவும் பாசமுங்கொண்ட நாயக்கமன்னர்களும் அவர்களது மத உணர்வுகளை மதித்து அறக்கொடைகள் வழங்கினார்கள். கி.பி. 1585ல் தஞ்சையை ஆண்ட செவப்ப நாயக்கர் அந்த நகரில் அடக்கம் பெற்றுள்ள இறைநேசரது தர்ஹாவிற்கு வருகை தருகிற இஸ்லாமிய துறவிகளது பராமரிப்பிற்காக பத்து ஏக்கர் பரப்பு காணியை அன்பளிப்பாக வழங்கினார்.[1] திருநெல்வேலி நகரில் உள்ள பள்ளியை பராமரிக்க கி.பி. 1692ல் மதுரை நாயக்க மன்னன் விஜயரங்க சொக்கநாதன் நிலைக்கொடை அளித்தான்.[2] இந்த மன்னரது வழி வந்த நாயக்க அரசிகளான ராணி மங்கம்மாளும், ராணி மீனாட்சியும் கி.பி.1701லும் கி.பி.1733 லும் மகான் நத்ஹர் (வலி) பாபாவின் திருச்சி தர்ஹா பராமரிப்பிற்கு சில கிராமங்களை இறையிலியாக வழங்கினார்கள்.[3] திருச்சியையடுத்த அம்மாபட்டி ஜமீன்தார், தமது ஜமீனில் இஸ்லாமியர்கள் தங்கி வாழ்வதற்கென ஒரு கிராமத்தை 17வது நூற்றாண்டில் தானமாக வழங்கினார். அந்த ஊர், இன்று ஜமீன் ஆத்துார் என இப்பொழுது சிறந்து விளங்குகிறது.[4]

இவர்களது முன்னுதாரணத்தைப் பின்பற்றி, தென்பாண்டிச் சீமையில் உள்ள ஜமீன்தார்களும், சிறு பாளையக்காரர்களும். இஸ்லாமியர், ஆங்காங்கு, மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் தொடர்ந்து வாழ்ந்து வரவும் இவர்களது, உழைப்பு, தோழமை, தொண்டு, ஆன்மீக வழிகாட்டுதல்கள், தமிழ் மக்களுக்குப் பயன்படும் வகையிலும், தங்களது அன்பளிப்புகளை நிலக்கொடைகளாக வழங்கினர். குறிப்பாக கி.பி. 1739 இல் மதுரை வட்டத்தில் காமாட்சி நாயக்கர் என்பவரும்[5] கி.பி. 1776ல் ஊத்துமலை சின்ன நயினாத்தேவர் என்ற மருதப்பத்தேவரும்[6]


  1. Sewell - Copper plates No. 53.
  2. Ibid
  3. MER / 911 p. p. 89.90.
  4. அப்துல் ரஹீம் M.R.M. இசுலாமிய கலைக்களஞ்சியம் (1970) தொகுதி பக் 628.
  5. Sewell – Copper plate No. 43
  6. Ibid