பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/166

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

153

இறைநேசர் அவர்கள், தமது அறிவுரையினால், கள்ளர்களைத் திருத்தி அந்தணப் பெண்களைக் காக்க முற்பட்ட பொழுது, கள்வர்களால் கொலையுண்டு மடிந்தார். தாய்க்குலத்திற்கு ஏற்றம் காண முனைந்து தியாகியான அவரது நினைவு என்றென்றும் போற்றிப் பரவத்தக்க தொன்று. மதத்தை எதிர்த்து அறத்தைக் காக்க முற்பட்ட அவரது நினைவை, “காட்டுபாவா சாகிபு அம்மானை” “காட்டுபாவா சாகிபு காரணீகம்” என்ற சிற்றிலக்கியங்கள் காலமெல்லாம் போற்றிப் பரவி நிற்கின்றன. புதுக்கோட்டைக்கு அண்மையில் அமைந்துள்ள அந்தப் புனிதரது அடக்கவிடத்தில் (காட்டுபாவா சாகிபு பள்ளிவாசல்) நடைபெறும் கந்துாரி விழாவில் கள்வர் இனத்தவர் மிகுந்த மன நெகிழ்வுடன் இன்றும் ஈடுபடுதல் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிகழ்ச்சியைப் போன்ற இன்னொரு அவல நிகழ்ச்சி தமிழக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கி.பி. 1614ம் ஆண்டு பட்டயம் ஒன்றிலிருந்து தெரியவருகிறது.[1] இந்தப் பட்டயத்தின்படி பிராமணப் பெண் ஒருத்தி வல்லத்தில் இருந்து தஞ்சாவூருக்கு செல்லும் பொழுது காட்டுப்பாதையில் கள்ளர்கள் அவளை வழிமறித்தனர். அந்தச் சமயம் அந்தப்பாதையில் வந்த இசுலாமிய துறவியிடம் (பக்கீரிடம்) அடைக்கலம் கோரினாள் துறவியும் அந்த பிராமணப் பெண்ணுக்காக கள்ளரிடம் பரிந்து பேசி அவளுக்கு ஊறு இழைக்க வேண்டாமென்று கெஞ்சினாள். ஆனால் அவர்கள், பக்கிர் சாயபுவை குத்திபோட்டார்கள் அவள் நாக்கை பிடிங்கிக் கொண்டு செத்துப்போனாள். இந்தப் பெண்ணுக்காக இசுலாமியத்துறவியும், இசுலாமியத் துறவியின் நிமித்தம் இந்துப் பெண்ணும் தங்களது இன்னுயிரைப் பறி கொடுத்த பாங்கினை அந்தப் பட்டயம் சொல்லுகிறது.

தென்னகத்தை கைப்பற்ற அனுப்பப்பட்ட தில்லி பேரரசர் அவுரங்கஜேப்பின் படைக்கு செஞ்சிக்கோட்டையில் பெருத்த ஏமாற்றம் காத்திருந்தது. எத்தனையோ குறுநில மன்னர்களையும் அவர்களது கோட்டைகளையும் எளிதில் முகலாயப் பேரரசில் இணைத்த தில்லி தளபதிகளுக்கு செஞ்சி ஒரு பெரிய வினாக் குறியாக இருந்தது. வீரத்தையும் விவேகத்தையும் ஆதாரமாகக்


  1. தஞ்சாவூர் மன்னர் செப்பேடு. தொல்லியல் கருத்தரங்கு - (1983) பக்கம். 3