பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

155

நல்ல துணைவனாக மகமத்கானது மகத்தான தியாகத்தை மக்கள் மறுக்கவில்லை. தேசிங்கு ராஜன் கதைபாடும் நாடோடிப் பாடகர்கள் இன்னும் உடுக்கை இழந்தவனை போல, இடுக்கண் களைந்த அவனது வீரவடிவை, அரிய நட்புணர்வை புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்மண்ணில், மலர்ந்து, மனம் பரப்பி காலவெளியிலே மறைந்துவிட்ட இந்த இனிய மலர்கள், காலமெல்லாம் மக்கள் மனத்தில்,வரலாற்றில், மனம்பரப்பும் வாடாமலர்களாக விளங்கி வருகின்றன. நமது தாயகத்தின் சமய ஒற்றுமையையும் மனிதாபிமான உணர்வுகளையும் உந்து சக்தியாகக் கொண்டு ஆன்ம நேய ஒருமைப்பாட்டைக் கட்டிக்காக்க எழுந்த இளம் உள்ளங்கள் அல்லவா அவர்கள்!.