பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/170

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

157

சேர, 10.10.668ல் அழிக்கப்பட்ட “கர்பலா”[1] படுகொலையை நினைவூட்டும் முஹர்ரம் மாத நினைவு நாட்கள் பல ஊர்களில் பெருவிழாவாக கொண்டாடப்பட்டன. அண்மைக்காலம் வரை இந்த விழாவில் முதல் பத்து நாட்களின் இறுதி நாளன்று திமிதித்தல், நிகழ்ச்சிக்கு பிறகு, அலங்கரிக்கப்பட்ட யானை, குதிரை, ஒட்டகம் ஆகியவற்றின் மீது மறைந்த நபி பேரர்களது நினைவுச் சின்னங்களுடனும் அலங்கார ரதத்துடன் (தாஜியா) ஊர்வலமாகக் செல்லும். இந்த ஊர்வலத்தில் இஸ்லாமியர் தங்கள் உடல் வலிமையையும் திறமையையும் எடுத்துக்காட்டும் வகையில் பல களரிகளில் ஈடுபடுவார்கள். வாள் சண்டை, மற்போர், சிலம்பம், தீப்பந்த விளையாட்டுகளுடன் மாறுவேடம் புனைந்து மகிழ்ச்சி ஊட்டுதலும் உண்டு. ஊரின் கோடியில் உள்ள குளத்தில் அந்த நினைவுச் சின்னங்களை நீரில் நனைத்து நீத்தார் விழாவை முடித்து திரும்புவது வழக்கம்.

மிக்க மனத்துயரத்துடன் அனுஷ்டிக்க வேண்டிய இந்த நினைவு நாளை, ஆரவாரத்துடன் கலகலப்பாக கொண்டாடுவதற்கு காரணம் தமிழக கோயில் விழாக்களின் பின்னணி தான் எனக் குறிப்பிட வேண்டியதில்லை. இங்ஙனம் முகரம் விழா கடந்த சில நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இன்றும், இராமநாதபுரம், இராமேஸ்வரம், காரைக்குடி, புதுக் கோட்டை ஆகிய ஊர்களில் "மகர் நோம்பு (முகர்ரம் நோன்பு) பொட்டல்" இருந்து வருவது இந்த விழாவிற்கான ஒதுக்கிடமாக அமைந்திருந்ததை நினைவூட்டுகிறது. இந்த முகர்ரம் நோன்பு பல நூற்றாண்டுகளாக தமிழில் மானோம்பு என வழங்கி வருகிறது. அதனையொட்டியே "மானோம்புச் சாவடி" (தஞ்சாவூர்) "மானோம்புக் கிடாய்வரி" (இராமநாதபுரம்) ஆகிய புதிய சொற்கள் தமிழ் வழக்கில் வந்துள்ளன.[2] விழிப்புணர்வு காரணமாக, இந்த விழா பெரும்பாலான இஸ்லாமிய மக்களால் அண்மைக் காலங்களில் புறக்கணிக்கப்பட்டு விட்டன. சில ஊர்களில் மட்டும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.


  1. Philips Hitti – History of the ARABS (1970) p. 190
  2. Rajaram Rao T – Manual of Ramnad Samasthanam (1898) р. 22