பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/174

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

161

அதனை மீண்டும் கோவிலில் பிரதிஷ்டை செய்ததிலும் முரண்பாடுகளான செய்திகள் இருந்தாலும் இந்த “துலுக்க நாச்சியார்” பற்றிய செய்திகளில் வேறுபாடு எதுவும் இல்லை, என்பதை திருவரங்ககோயில் ஒழுகு உறுதிபடுத்துகிறது.[1]

இத்தகைய புராணமும் வரலாறும் கலந்த இன்னொரு நிகழ்ச்சி புதுக்கோட்டை மானுவலில் இடம் பெற்றுள்ளது.[2] புதுக்கோட்டைக்கு அண்மையில் கோவில் பட்டி என்று ஒரு கிராமம் உள்ளது. இதனை யொட்டிய திருவாப்பூரில் உள்ள கன்னி ஒருத்திக்கும் திருச்சிராப்பள்ளியில் இருந்த மலுக்கனுக்கும் (இஸ்லாமிய இளைஞன்)க்கும் இடையில் மாறாத காதல் மலர்ந்தது அந்த இளைஞன் ஒவ்வொரு நாள் இரவிலும் திருச்சியிலிருந்து குதிரைச்சவாரி செய்து வந்து தனது காதலியைச் சந்தித்துச் செல்வது வழக்கம். இந்த இளம் உள்ளங்களது காதல் அங்கு காவல் தெய்வமாக விளங்கிய "மலைக்கறுப்பருக்குப்" பிடிக்க வில்லையாம். தமது எல்லையில் களவொழுக்கத்தில் திளைத்து வந்த மலுக்கனை ஒருநாள் இரவு மலைக்கறுப்பர் கொன்றுவிட்டார். மீளாத் துயரில் ஆழ்ந்த அந்தக் கன்னி தனது இதயக்கோவிலின் தெய்வமாக விளங்கிய அந்த இசுலாமிய இளைஞனுக்கு அவன் கொலையுண்ட இடத்தில் ஒரு நினைவுச் சின்னம் அமைத்தாள். அது நாளடைவில் கோவிலாக மாறி இன்று மலுக்கன் கோவில் என வழங்கப்படுகிறது.

மதுரை மாநகரில் நடைபெறும் இன்னொரு திருவிழா, சொக்கநாதக் கடவுள் திருவாதவூரடிகளுக்காக நரிகளை பரிகளாக்கிய திருவிளையாடல். ஆண்டுதோறும் ஆவணித் திங்கள் மூல நட்சத்திர நாளன்று, இந்தத் திருவிழா மதுரை மீனாட்சி சுந்தரர் கோயிலில் நடைபெறுகிறது. மாணிக்க வாசகருக்காக கிழக்கு கடற்கரையில் இருந்து குதிரைகள் கொண்டு வந்த அரபு வணிகருக்குப் பதிலாக இசுலாமியர் ஒருவரைக் குதிரை கொண்டு வரச் செய்து விழா நடத்தும் பழக்கம் அண்மைக்காலம் வரை அந்தக் கோயிலில் இருந்து வந்தது. அதைப்போல இராமநாத புரம் அரண்மனையில் உள்ள சேதுபதி மன்னர்களது குடும்பக்


  1. Ibid p. 28
  2. Vktarama lyer K.R. - Manual of Pudukottai State (1938) Vol. I