பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/175

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

கோயிலான ராஜராஜேஸ்வரி ஆலயத்தின் நடைபெறும் நவராத்திரி பூசையின்பொழுது, பிரசாதத்தை முதன்முதலில் பெறக் கூடிய தகுதி கன்னிராசபுரம் நாட்டாண்மை அப்துல்கனி சேர் வைக்கு இருந்து வந்தது. சேதுபதி மன்னருக்கு எதிரான போர் ஒன்றில் அப்துல் கனி சேர்வைக்காரர் ஆற்றிய அருந்தொண்டினைக் சிறப்பிக்கும் வகையில் அத்தகைய தனிச் சிறப்பினை முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி மன்னர் வழங்கி இருந்தார்.[1] இப்பொழுது சேதுபதி மன்னரும் இல்லை. இந்த மரபும் கைவிடப்பட்டுவிட்டது.

இன்னொரு செய்தி இராமநாதபுரம் சீமையில் உள்ள குணங்குடி சையது முகம்மது புகாரி(வலி) அவர்களது தர்காவின் பராமரித்து வரும் உரிமை, அந்த ஊருக்கு அண்மையில் உள்ள துடுப்பூர் அம்பலக்காரர் என்ற இந்துக் குடும்பத்தினருக்கு இருந்து வருவது. தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத அறங்காவலர் முறையாகும். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கும் இதர சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வழி வழியாக வந்துள்ள பிணைப்பிற்கு இதைவிட சிறந்த எடுத்துக்காட்டு வேறு என்ன வேண்டும். இந்தப்புனித அடக்கவிடத்தின் பராமரிப்பிற்கு உடலாக என்றென்றும் உதவுவதற்கு இராமநாதபுரம் மன்னர்கள் திருமலை ரகுநாத சேதுபதியும், ரகுநாத கிழவன் சேதுபதியும் பல நிலமான்யங்களை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.)


  1. இந்தச் செய்தியை அன்புடன் தெரிவித்தவர் சேதுபதி மன்னர் வழியினரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதபுரம் திரு. ஆர். காசிநாத துரை அவர்கள்.