பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

169

அடுத்து, காயல்பட்டினத்தில் உள்ள பழைய குத்பா பள்ளிவாசல் அமைப்பும் தமிழக இஸ்லாமியரது தொன்மையான அமைப்பில் ஒன்றாகும். இந்தப்பள்ளி முழுவதும் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. சதுர வடிவில் உள்ள இந்தப்பள்ளியில் வளைவுகளோ, கும்பாஸ் விதானங்களோ, மினரட்டுகளோ இல்லாமல் எளிமையாக அழகுடன் காட்சியளிக்கிறது. காயலில் பாண்டியன் மாறவர்மன் குலசேகரனது (கி.பி. 1274-1310) பேரவையில் பிரதான அலுவலராக விளங்கிய பெரு வணிகர் சுல்தான் ஜமாலுத்தீன் என்பவரால் பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தப் பள்ளி நிர்மாணிக்கப்பட்டதாகும், அவர், அரபு நாட்டில் இருந்து காயல்பட்டினத்தில் குடியேறியவரானாலும். அப்பொழுதைய நடைமுறையில் இருந்த "மூரிஸ்" முறையைப்பின்பற்றி இந்தப் பள்ளியை அமைக்கவில்லை. அதற்கான காரணம் என்ன என்பதும் புலனாகவில்லை.

மற்றும், இராமேஸ்வரத்தில் உள்ள தொழுகைப்பள்ளி, வரலாற்றுதொன்மை வாய்ந்தது ஆகும். இதனை கி.பி. 1311 ல் தென்னக படையெடுப்பின் இறுதி நிகழ்ச்சி என குறிப்பிடத்தக்க வகையில் தில்லி பேரரசர் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் கபூர் அமைத்தார்.[1] கி. பி. 1318 ல் அங்கு மற்றொரு படையெடுப்பிற்கு தலைமை தாங்கிச் சென்று தில்லி திரும்பிய தளபதி குஸ்ருகான் அந்த பள்ளியில் மராமத்து பணிகளை மேற்கொண்டதாக வரலாற்றுக் குறிப்புகளில் காணப்படுகிறது.[2] இந்தச் சிறு பள்ளிவாயில் முழுவதும் கல்லினால் அமைக்கப்பட்டு நீண்ட சதுர வடிவில் உள்ளது. வழிபாட்டு பேரவையை உள்ளடக்கியதாக முகப்பிலும் தெற்கிலும் வடக்கிலுமாக நீண்ட பத்திகளுடன் விளங்குகிறது. இன்ன பாணியிலான கட்டுமானம் எனக் குறிப்பிடும் வகையில் அங்கு எவ்வித நுணுக்கமான வெளிப்பாடுகள் எதுவும் இல்லை. தளபதி மாலிக்காபூரின் படையெடுப்பின் பொழுது, சுருங்கிய காலததில் அவசரப்பணியாக இந்தக் கட்டுமானத்தை அமைத்திருக்க வேண்டும் என்பதே இதற்கு தெளிவான விடை.


  1. Krishnasami Ayyangar Dr. S. - Soulth India and her Mohammedan Invaders (1924)
  2. Elphinstone – History of India p. 340