பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/184

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

171

தமிழக கட்டுமானக் கலைக்கு புதுமையானவை. உலகில் இத்தகைய கொடி மாடங்கள் முதன்முறையாக ஸிரிய நாட்டில், ஏழாவது எட்டாவது நூற்றாண்டுகளில் கண்காணிப்பு மேடை போன்று உயரமாக எழுப்பப்பட்டன.[1] அதனையொட்டி, பின்னர் கிறிஸ்தவ தேவலாயங்களில் சதுர வடிவில் மணிக் கூண்டுகளாக, உயரமாக அமைக்கப்பட்டன. பிற்கால இஸ்லாமிய கட்டுமான அமைப்பான 'மினாரா'க்களுக்கு இத்தகைய கட்டுமானமே முன்னோடியாகும்.

பத்தொன்பது நூற்றாண்டுகளில் அமைக்கப்பட்ட இஸ்லாமிய கட்டுமானங்களில் மீண்டும் இஸ்லாமிய உத்திகள் தேங்கி மிளிர்கின்றன. காரணம் அப்பொழுது தமிழகத்தில் பெரும்பகுதி ஆற்காட்டு நவாப்பின் ஆதிக்கத்தில் இருந்தது. அதனால் அரசியல் ஆதரவுடன் அமைக்கப்பட்ட அந்த கட்டுமானங்களில் இஸ்லாமிய உத்திகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. அவைகளை நன்கு அறிந்து இருந்த சிற்பிகளும், கல்தச்சர்களும் அப்பொழுது தமிழகத்தில் ஏராளமாக இருந்தனர். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஆற்காட்டு நவாப் மாளிகை போன்ற ஒரிரு கட்டுமானத் தொகுதிகளைத் தவிர ஏனையவை அனைத்தும் இறைவழிபாட்டிற்காக ஆங்காங்கு அமைக்கப்பட்ட தொழுகைப் பள்ளிகளாகும். சென்னைப் பெருநகரிலும், தஞ்சை, திருச்சிராப் பள்ளி, மதுரை, இராமநாதபுரம் திருநெல்வேலி பகுதிகளில் உள்ள பெரும்பாலான தொழுகைப் பள்ளிகள் இந்தக் கால கட்டத்தையும், வகையையும் சேர்ந்தவையாகும்:

இன்னொரு அற்புதமான படைப்பு காயல்பட்டினத்தில் உள்ளது. தமிழகத்தில் வேறு எங்கும் காணப் பெறாத இஸ்லாமிய கட்டுமான கலைச் சின்னத்தை கி.பி. 1865ல் பாக்தாத் மெளலானா என அழைக்கப்பட்ட சமயச் சான்றோர் நிர்மானித்துள்ளார். பாக்தாத்திலிருந்து காயல்பட்டினத்திற்கு குடிபெயர்ந்த அவர் அந்தக்கால கட்டத்தில் சுமார் நாற்பதினாயிரம் ரூபாய் செலவில் ஆறு வருட காலத்தில் இதனை கட்டி முடித்துள்ளார்.[2] இஸ்லாமியரின் ஞான மார்க்கமான காதரியா


  1. Philips H. Kitty-History of the Arabs (1972) p. 265
  2. சையது அஹமது எம்.கே. ஹாபிஸ் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கட்டுரைக்கோவை (1978) பக் 234