பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/187

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


23

கல்வெட்டுகளும் செப்பேடுகளும்


தமிழக வரலாற்றைத் தெளிவாக வரைவதற்கு தக்கசாதனமாக தமிழகத்தின் முடியுடை மன்னராக விளங்கிய சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், நாயக்கர்களும் தங்களது ஆட்சிக் காலத்தில் பொறிக்கச் செய்த கல்வெட்டுகளும் செப்பேடுகளும் அமைந்துள்ளன. அவைகளில் இருந்து அன்றைய ஆட்சிமுறை, ஆட்சிக்குட்டட்ட நாடுகள், அரசியல் நிகழ்ச்சிகள், அரும்பெரும் செயல்கள், போன்ற பல செய்திகள் பெறப்படுகின்றன. கால வெள்ளத்தில் அழிந்து போன வரலாற்றின் கூர்மையான விளிம்புகளின் விளக்கமாகவும் அவை விளங்குகின்றன. ஆனால், இந்தச் செய்திகள், தமிழக இஸ்லாமியர்களைப் பற்றி அவர்களது தொன்மை, பண்பாடு, பழக்கவழக்கங்கள், தமிழ்ச்சமுதாயத்தில் அவர்களது பங்கு, என்பன போன்ற பலவற்றைப் புரிய வைக்கும் முழுமையான அளவில் உதவவில்லை. காரணம், தமிழகத்தில் இஸ்லாமியர்களது அரசு, ஆட்சி, ஒரு நூற்றாண்டு கால அளவில கூட தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறவில்லை. ஆதலால் இஸ்லாமிய மன்னர்களோ ஆளுநர்களோ வழங்கிய சாசனங்களை வரலாற்றில் காண்பது அரிது.

என்றாலும், தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டு முதல் அரபுக் குடா நாடுகளில் இருந்து வணிகத்திற்காகவும் சமயப் பணிக்காகவும், இஸ்லாமியர் குடிபுகுந்தது, தொழுகைப்பள்ளி, நிர்மானம், அரசியல் ஊக்குவிப்புகளுக்கு உரியவர்களாக விளங்கியமை, இறையிலிகள் பெற்றமை, தமிழ் மக்களுடன் இணைந்து செயல்பட்டமை, போன்ற செய்தித் தொடர்கள் சில கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் குறிக்கப்பெற்று இருப்பதால், அவைகளையே