பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/194

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

181

இடங்களைப் பராமரிக்கவும், விளக்கு ஏற்றவம், அங்கு வருபவர்களுக்கு உணவு படைக்கவும், பல நூறு ஏக்கர் விளை நிலங்களை நிலக்கொடையாக திருமலை சேதுபதி, கிழவன் என்ற முத்துக் குமார விஜயரகுநாத சேதுபதி, குமார முத்து குமார சேதுபதி ஆகியோர் வழங்கினர். இன்றும், அந்த தர்மங்கள் தொடருகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டில். பெரும்பாலும் சேது நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் நெசவாளர்களாக இருந்தனர் என்பதை சேதுபதிகளது பிற செப்பேடுகளில்” நமது காவல்குடியான துலுக்கர் போட்டால் தறியொன்றுக்கு ஒரு பணமும்" என்ற தொடர்கள்[1] விளங்குகின்றன. நாகூரில் அடக்கம் பெற்றுள்ள புனித சாகுல் ஹமீது ஆண்டகை அவர்கட்கு மராட்டிய மன்னர் துல்ஜாஜி 1753ல் கிராமங்களை வழங்கிய செப்பேடுகள் மோடி மொழியில் உள்ளன. அந்த கட்டத்தில் நெல்லை மதுரை மாவட்டங்களில் இஸ்லாமிய சமுதாயத்தில் இதர பிரிவினர்களுடன் இணைந்து பொதுநலனில் அக்கரை கொண்டர்களாக இருந்தனர் என்பதை பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வெத்திலைக் குண்டு, குற்றாலம் ஆகிய ஊர்களது இரு செப்பேடுகள் தெரிவிக்கின்றன.[2]

இந்தச் செப்பேடுகளில் இங்கு குறிப்பிடத்தக்கவை கி.பி. 1738ல் இராமேசுவரம் ஆபில் காபில் தர்காவிற்கும் இ.பி. 1745 ல் ஏறுபதி சுல்தான் சையிது இபுராகீம் ஷஹீது (வலி) அவர்களது தர்காவிற்குமாக வழங்கிய சர்வமானிய நிலக் கொடைகள் பற்றியவை. அவைகளை வரலாறு புகழ வழங்கியவர் அப்பொழுது இராமநாதபுரத்தில் அரசோச்சிய சைவத்துரை என வழங்கப்பட்ட முத்துக்குமார விஜயரகுநாத சேதுபதி மன்னராவர். இராமேஸ்வரம் தர்காவிற்கு பக்கிரிபுதுக்குளம் என்ற பேரூரை நிவந்தமாக வழங்கும் அந்தப் பட்டயம். தமிழக இசுலாமியரது சுய உணர்வுகளை மன்னர் நன்கு அறிந்து இருந்ததும் மேலே கண்ட செப்பேடுகளில் வாசகங்களிலிருந்து புலப்படுகிறது தமிழகச் செப்பேடுகளின் சொற்றொடர் அமைப்பில் இங்ஙனம் ஒரு புதிய பாணியையும் இந்த மன்னர் உருவாக்கி உதவி இருப்பதையும் இந்த வாசகங்கள் நினைவுபடுத்துகின்றன.


  1. சேதுபதி மன்னர் செப்பேடுகள்
  2. Antiques – vol I