பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/195

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

இதுவரை இங்கு குறிப்பிடப்பட்ட கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் தமிழக வரலாற்றின் தவிர்க்க முடியாத காலகட்டத்தில், அந்நியர்களாக இந்த தமிழ் மண்ணில் அடியெடுத்து வைத்த சிறு பிரிவினரான இஸ்லாமியர், ஒருசில நூற்றாண்டு காலத்தில் இந்த மண்ணின் மணத்துடன் மலர்ந்து, மக்களுடன் கலந்து, இந்த மண்ணின் மைந்தர்களாக, மகிபதிகளாக, மொழி, அரசியல் பண்பாடு, ஆகிய துறைகளில் உயர்ந்த நின்ற வித்தையை விளங்க வைக்கும் கருவூலங்களாகக் காட்சி அளிக்கின்றன. பொதுமக்களது கவனத்தினின்றும், வரலாற்று ஆசிரியர்களது ஆய்வுகளினின்றும் தொடர்பு இல்லாமல் இருக்கும் இந்தக் கல்வெட்டுக்களையும், செப்பேடுகளையும் இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் ஆய்வு செய்தால் தமிழக இஸ்லாமியரது வரலாறு மட்டுமின்றி, தமிழகத்தின் உண்மையான வரலாற்றையும் வெளிக்கொணர முடியும் என்பதில் ஐயமில்லை.