பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/196

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


24

இலக்கிய அரங்கில்


வாழையடி வாழையாக வளர்ந்து வந்துள்ள தமிழக இஸ்லாமியர்களின் வரலாறு என்பது கடந்த ஆயிரத்து இருநூறு ஆண்டுகளை அடக்கியுள்ள ஏடாகும். எத்துணையோ துறைகளை எடுத்து இயம்புகின்ற அந்த ஏட்டிலே அவர்களது தமிழ்த் தொண்டு என்பதும் ஒரு சிறப்பான பகுதியாகும். அதனை வரலாற்றுப் பார்வையில் பகுத்து நோக்குதல் அவசியமாகும். பொதுவாகப் பிற்காலப் பாண்டியரது பெருமை மிக்க ஆட்சியில், தமிழ்க் குடிகளாக விளங்கிய சிறுபான்மைத் தமிழக இசுலாமியர், அரசியல் ஊக்குவிப்புகளால் உயர்ந்து வாணிபச் சிறப்புடன் சமுதாயச் சிறப்பையும் எய்தினர். அதுகாறும் ஆங்காங்கு அஞ்சு வண்ணங்களில் தனித்து, ஒதுங்கி வாழ்க்க அவர்கள், நாளடைவில் பெருநகர்களிலும் குடியேறி பிற பகுதியினருடன் கலந்து வாழும் வாய்ப்பைப் பெற்றனர். வாணிபச் சாத்துக்களினாலும், அரசியல் பணிகளினாலும் தமிழ் மொழியுடன் அவர்கள் கொண்டிருந்த தொடர்பு, அதனைக் கற்றுத் தேர்ந்து தெளியும்படி செய்தது. ஏற்கனவே அவர்களது தாய்மொழியான அரபும், பார்சியும், காலப்போக்கில் தொடர்மொழியாகிவிட்டதுடன், அவர்களது வழிமொழியான தமிழ்மொழி அவர்களது வாய்மொழியாகி தாய்மொழியாக வாய்த்துவிட்டது.

ஆதலால், இஸ்லாமிய சமய சிந்தனைகளை இறைமறையில் கருத்துக்களை, தமிழக மக்களிடம், குறிப்பாக தமிழகத்தின் இஸ்லாத்தைப் புதிதாக ஏற்றுக் கொண்டவர்கள், தமிழ் மூலம் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க முயற்சிகளில் ஈடுபட்டனர். அதற்கென அவர்கள் தேர்வு செய்த ஒரே முறை, தமிழை அரபு வரிவடிவில் அமைத்து வழங்கியது ஆகும். அதனையே பிற்காலத்