பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/199

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

யும், சான்றோர் வாழ்வினையும் சொல்லக்கூடிய நூல்கள் தங்களது தமிழ்மொழியில் இல்லையே என ஏங்கியது. அவர்களது நினைவிலே இனித்து, நெஞ்சத்திலே நிலைத்து அதனால் எழுந்த ஊக்கமும், நாளடைவில் உருப்பெற்று உயர்ந்தது தான் இன்று நம்மிடையே எஞ்சி உள்ள இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் செல்வங்களாகும்.

காலத்தின் அழிவுக் கரங்களில் இருந்து தப்பிப் பிழைத்த தொன்மையான பேரிலக்கியங்கள் எதுவும் தமிழக இஸ்லாமியருக்கு கிட்டவில்லை. என்றாலும், பல்சந்தமாலை என்ற பழம் நூலின் எட்டுப்பாடல்களை மேற்கோளாகக் கொண்ட "களவியற் காரிகையை" பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் முதன்முறையாக வெளியிட்டுள்ளார்கள். தமிழ் இலக்கிய உலகிற்கு, குறிப்பாக இஸ்லாமிய தமிழ் இலக்கியப்பட்டியலுக்கு அணி சேர்க்கும் இந்தப் பாடல்களை இலக்கிய உலகிற்கு வெளிக் கொணர்ந்த அன்னாருக்கு இஸ்லாமியர் என்றென்றும் கடமைப்பட்டுள்ளனர். இந்தப் பாடல்களில் இருந்து பல்சந்த மாலை ஆசிரியரது பெயரும். காலமும் அறிந்து கொள்வதற்கு இல்லை. ஆனால், இதுவரை அச்சில் கொணரப்பட்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பாடல்களில் தொன்மையானவை இவை என்பதை அறுதியிட்டுச் சொல்லக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் தமிழக இஸ்லாமியரது தமிழ்ப்பணிக்கும் இந்த நூல் முன்னோடியாக அமைந்துள்ளது.

பொதுவாக, தமிழ் மொழியின் தொன்னுாற்று ஆறு வகையான சிற்றிலக்கியங்களின் பட்டியலில் பல்சந்தமாலை என்ற பகுப்பும் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. பதின்மூன்றாம் நூற்றாண்டு இலக்கண நூலான பன்னிருபாட்டியலில் "பல்சந்த மாலை” என்ற பகுப்பு பேசப்பட்டுள்ளது. பதினைந்தாவது நூற்றாண்டு இலக்கியமான பிரபந்த திரட்டும்,

"பத்துக்கொரு சந்தம் பாடி பா நூறாக வைத்தல்........" என பல்சந்தமாலை அணி இலக்கணப்படி வாடல், ஊடல், கூடல் என்ற அகத்துறைகளை அங்கமாகக்கொண்டு தொகுக்கப்படுவது இந்தப் பாமாலை. தமிழ் இலக்கியத்தில் இத்தகைய பல்சந்த மாலை வேறு எதுவும் புனையப்பட்டு இருப்பதாக இதுகாறும் செய்தி இல்லை.