பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/208

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

195

தின் இலக்கான ஏகத்துவத்தை முழக்கப்பிடும் படைப்புகளாக, இறைத்துாதர்கள் தாவூது நபி, சுலைமான் நபி, இபுராகிம் நபி, மூஸாநபி, யூசுப்நபி, முகம்மதுநபி, ஆகியோர் பற்றிய புராணங்கள், அண்ணல் முகம்மது (அல்) அவர்களது வாழ்க்கை வரலாறு பற்றிய காவியங்கள், முகையதீன் அப்துல் காதர் ஜீலானி, ஏர் வாடி சுல்தான் சையது இபுராகீம் (அலி), ஆஜ்மீர் குவாஜாசாகிப் (வலி), நாகூர் சாகுல் ஹமீது ஆண்டகை - ஆகிய இறைநேசர் பற்றிய இலக்கியங்கள்; இன்னும் ஏராளமான சிற்றிலக்கியங்கள் — இவை போல்வன.

அந்தாதி, அம்மானை, அலங்காரம், ஏசல், கலம்பகம், கிஸ்ஸா, கும்மி, குறவஞ்சி, கீர்த்தனை, கோவை, ஞானம், பதம், பள்ளு, படைப்போர், பிள்ளைத்தமிழ், சதகம், சிந்து, மஞ்சரி, மசாலா, மாலைகள், முனாஜாத், நாமா, லாவணி, வண்ணம், வாழ்த்து என்ற பல்வேறு சுவையும் துறையும் கொண்ட இலக்கிய வடிவங்கள் இசுலாமியத் தமிழ்ப் புலவர்களால் உருவாக்கப்பட்டன. இவைகளில் கிஸ்ஸா, முனாஜாத் மசாலா, நாமா, படைப் போர் என்பன முழுவதும் தமிழுக்குப் புதுமையான கலைவடிவங்கள் இலக்கியப்படைப்புகள். கன்னித்தமிழுக்கு இசுலாமியர் வழங்கிய காணிக்கைகளாக காலமெல்லாம் கட்டியங் கூறி நிற்கின்றன அவை. இத்தகைய எழில்மிகு இலக்கியங்களை இசுலாமியப் புலவர்கள் படைப்பதற்கு அவர்களது தமிழுணர்வு காரணமாக இருந்தாலும் அவைகளை அன்று ஆவலுடன் ஏற்றுக் கொள்வதற்கு, அனைத்து இசுலாமியர் மட்டுமல்லாமல், அன்றைய தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதுமே முனைந்து நின்றது. இல்லையெனில் இத்துணை இலக்கியங்கள் தமிழக இலக்கிய வரலாற்றின் அடுத்தடுத்து தலையெடுத்து இருக்கமுடியாது. அதிலும் குறிப்பாக வடுகர்களது ஆட்சியில் வடமொழியும், தெலுங்கும், அரசியல் ஆதரவு பெற்ற அரசு மொழியான பேறு பெற்ற நிலையில், தமிழுக்கு இவ்வளவு சிறப்பா? அதிலும் தமிழ் இலக்கிய உலகிற்கு புதியவர்களான தமிழக இஸ்லாமியப்புலவர்களால் இதற்குச் சான்றாக இரண்டு வரலாற்று நிகழ்வுகளை இங்கு குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். நமக்கு கிடைத்துள்ள இஸ்லாமிய இலக்கியங்களில் தொன்மையாகக் கருதப்படும் “ஆயிரம் மஸாலா” என்ற அரிய நூல் மதுரையில் இருந்த தமிழ்ச் சங்கத்தினர் முன் கி.பி. 1572ல் அரங்கேற்றம் பெற்றுள்ளது. இதனை அந்நூலாசிரியரது பாயிரம்,