பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/209

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196


“அந்தமுறு மதுரைதனில் செந்தமிழோ"
சங்கத்தில் அரங்கம் ஏற்றி — — —”

என அறிவிக்கின்றது. மற்றொரு நிகழ்ச்சி இந்நூலை அடுத்து இஸ்லாமிய தமிழ் உலகிற்கு கிடிைத்த இணையற்ற இலக்கியக் கொடை ஆலிப்புலவரது மிஹராஜ் மாலையாகும். இதனைப் புனைந்த செவ்வல் மாநகரின் செந்தமிழ்ப் புலவர் இஸ்லாமியர்கள் மிகுதியாக வதியும் கோட்டாறு நகரில் அரங்கேற்றுவதற்கு ஆசைப்பட்டார். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். என்றாலும் அன்றைய நிலையில் இஸ்லாமியருக்கு இலக்கியப் படைப்பு ஒன்றின் அரங்கேற்றம் என்பது அவர்களுக்கு முற்றும் புதுமையான செயலாக இருந்தது. அதனால் அம்முயற்சியில் ஈடுபாடும் இணக்கமும் இல்லாது இஸ்லாமியர் காணப்பட்டனர். என்றாலும் அதே நகரில் வாழ்ந்த இந்து கைக்கோளர் தலைவரான பாவாடைச் செட்டியார் என்ற பைந்தமிழ் ஆர்வலரது முயற்சியினால் கி.பி. 1590ல் கோட்டாறு கைக்கோளர் கூடிய சபையில் சிறப்பாக அரங்கேற்றம் பெற்றது. இந்நிகழ்ச்சிகளை இன்றும் நினைக்கும் பொழுது நெஞ்சமெல்லாம் தமிழ் போல இனிக்கின்றது. தாய்மொழியான தமிழ், சாதி, இனம், மதம் ஆகிய குறுக்கு கோடுகளைக் கடந்து நாயக மொழியாக விளங்கி வந்துள்ளதை இந்த நிகழ்ச்சிகள் நினைவூட்டுகின்றன. திறமான புலமையெனில் தமிழோர் பாராட்டி பெருமை செய்தல் இயல்புதானே.

இதனை மதுரைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவா தமிழ்நாட்டு முஸ்லிம்கள் அரபு மொழியில் பயிற்சி பெற்றார் அல்லர், அறபு எழுத்துக்களை வாசிக்கவே அறிந்து இருந்தனர். இவர்களிடையே சமயப் பற்றை உண்டாக்கும் பொருட்டு இவர்களுக்கு இலகுவில் விளங்கக்கூடிய தமிழ்மொழியில் நூல்கள் எழுத வேண்டி நேர்ந்தது. எனவே இசுலாமியக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட தமிழ், நூல்கள், தமிழ் நாட்டு முஸ்லீம்களுக்கு பயன்படக்கூடிய முறையில் இயற்றப்பட்டன. இந்நூல்கள் பெரும்பாலும் அரபு மொழியில், உள்ள இசுலாமிய முதல் நூல்களையே பின்பற்றி இயற்றப்பட்டன” என பிறிதொரு காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

[1]


  1. 1. ஜான் சாமுவேல் - பண்பாட்டுக் கலப்பும் இலக்கிய ஒருமை யும் (1986) பக்: 104