பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36


மற்றும் “சோனக வாளை”, “சோனக கெளுத்தி” என்ற மீன் வகைகளைப் பற்றிய விவரங்கள் பேரகராதியான லெக்சிகளில் கொடுக்கப்பட்டுள்ளன.[1] இன்னும் “சோனகச் சிடுக்கு” என்றதொரு அணியும் தமிழ் மகளிரது அணிகலன்களில் ஒன்றாக இருந்ததை தஞ்சை பெருவுடையார் கோவில் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.[2] இவைகளும், இவை போன்ற ஏனைய வரலாற்று, இலக்கியத் தடயங்களும், வணிகத்திற்காக அரபு நாடுகளில் இருந்து தமிழகம் போந்த இஸ்லாமியர் இந்த மண்ணின் நல்ல மரபுகளுக்கு இயைந்து இஸ்லாமியத் தமிழர்களாகி, துலுக்கராகி, பின்னர் சோனகர் என்ற புதுச் சொல்லாலும் வழங்கப்பட்டு வந்தனர் என்பதை ஒருமுகப்படுத்தி உறுதி சொல்வதற்கு உதவுகின்றன. இவ்விதம் சோனகர் தமிழ்ச்சமுதாயத்தின் பல துறைகளிலும் கலந்து தமிழர்களாகவே மாறிவிட்ட பொழுதிலும் ஆந்திர மாநிலத்தில் ராஜராஜ சோழனது ஆட்சிப்பகுதியான திருக்காளத்தியில் நிலைத்து இருந்த சோனகர்களிடமிருந்து “சோனகவரி” வசூலிக்கப்பட்ட செய்தியும் நமது வரலாற்றில் உள்ளது.


  1. லெக்ஷகன் பேரகராதி (சென்னை 1932) பக் 3395
  2. நாகசாமி இரா - தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டுக்கள் தொகுதி 1. (1962) பக்கம் 42