பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61


இந்தப் புதிய சமயப் பணிக்கு, செயற்கரிய சாதனைக்கு, தமிழ் மண்ணில் தங்கள் உழைப்பையும் உயிரையும் வழங்கிய இசுலாமிய உத்தமர்கள் அனைவரையும் கடந்த காலம் இனங்காட்டத் தவறிவிட்டது. அவர்களில் ஒரு சிலரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் அங்கும் இங்குமாக கிடைத்துள்ளன. (அவர்களது பெயர் பட்டியல் ஒன்றும் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது) அவை வரலாற்று ஆய்விற்கு வழி துலக்குவதாக இல்லை. தமிழ்நாட்டின் காடுமேடுகளில், சாலை, சோலையில் பெயர் தெரியாத அடக்க விடங்களில் தங்களை முடக்கி அருந்துயில் கொள்ளும் அரபு, துருக்கி, சிரியா, பாரசீக நாட்டு மேதைகளே அவர்கள். அவுலியாக்கள், மஸ்தான்கள், மலுங்குகள், பீர்கள், பக்கீர்கள், சூபிகள், ஷைகுகள், தர்வேஸ்கள், ஆலிம்கள் என்று மட்டுமே அவர்களை இனம் தெரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் அனைவரும் அண்ணல் நபி (ஸல்) வழியில் வாழ்ந்தவர்கள். அவர்களது வழியில் வாழும்படி வழிகாட்டியவர்கள். அந்தப் பணியில் கண்ட இன்னலை, கனிந்த கன்னலாக ஏற்று மகிழ்ந்தவர்கள். இவைகளுக்கு மேலாக அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேறு வாய்ப்பு இல்லை.

குறிப்பாக, திருச்சிராப்பள்ளியில் மோனத்துயில் கொள்ளும் தப்லே ஆலம் நத்ஹர் (வலி) பாபா அவர்கள் பத்தாம் நூற்றாண்டில் விரியா நாட்டினின்றும் சமயப் பணிக்கென அப்பொழுது அரசியல் சிறப்புற்று இருந்த தமிழகத்திற்கு வந்தவர் உறையூரில் தங்கி தங்களது இஸ்லாமியப் பணியைத் தொடங்கினார்கள்.[1] இன்று திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் உள்ள முஸ்லீம்களது முன்னோர்கள் பெரும்பாலும் பாபா அவர்களுடைய போதனைக்குப் பணிந்து இஸ்லாத்தில் இணைந்தவர்கள். இத்தகைய மகானுடைய மகத்துவங்களைத் தவிர்த்து அவர்களுடைய வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இவர்களைப் போன்று மதுரை, நெல்லை, இராமநாதபுரம் மாவட்டங்களில் இஸ்லாத்தைப் பரப்பிய முன்னோடிகள் யார் எனத் தெரியவில்லை. ஆனால் கி.பி. 1050 இல் மாலிக்-உல்-முல்க் என்பவர் தலைமையில் தொண்டர் பலர் மதுரையில்


  1. அப்துல் ரஹீம் எம். ஆர். எம். இசுலாமிய கலைக்களஞ்சியம் (1962) தொகுதி III பக். 375