பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு : 3

டாக்டர். மு. வ. வின் வாழ்வியற் கருத்துகள்

“தமிழர்களிடத்தில் ஒரு குறை உண்டு. இன்றைய போராட்டத்திலே அக்கறை காட்டி உயிரை விடுவார்களே அல்லாமல் நாளைய தற்காப்புக்கு வேண்டிய திட்டம் போட்டு வெற்றி பெறும் வகையில் கடமையைச் செய்ய மாட்டார்கள். சேர, சோழ, பாண்டியர் காலம் முதல் தமிழர் அடைந்து வரும் வீழ்ச்சிக்கு எல்லாம் இதுதான் காரணம். மேடைப் பேச்சும் கைத்தட்டும் இந்தக்குறையை வளர்த்தனவே தவிர, போக்கவே இல்லை. இந்தக் களங்கம் தீரும் வரையில் சில ஆண்டுகளாவது மேடைத் திறமையைத் தமிழர் மறந்து போனாலும் கெடுதி இல்லை.”

  • மனம் ஒரு பெரிய உலகம்; அந்த மன உலகில்

அந்தியின் அழகும் உண்டு, காலையின் கவர்ச்சியும் உண்டு; நள்ளிரவின் குளிர் மயக்கமும் உண்டு; நண்பகலின் கொதிப்பும் உண்டு. அந்த மன உலகில் கருமுகில்களும் உண்டு; வெண்முகில்களும் உண்டு; உயர்ந்த மலைகளும் உண்டு; ஆழ்ந்த கடல்களும் உண்டு; அந்த மன உலகில் வெயில் பரப்பும் கதிரவனும் உண்டு; வெண்ணிலாப் பொழியும் திங்களும் உண்டு; தட்பமும் உண்டு; மழையும் உண்டு; வளமும் உண்டு; வறட்சியும் உண்டு. அந்த மன உலகைக் காணவேண்டும்; ஆராய வேண்டும் பாட வேண்டும்; பண்படுத்த வேண்டும்."