பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மீரா 9


"கற்பனை இல்லையென்றால் கவிதை இல்லை" என்று கூறுகின்றார்கள். ஆனால், நின்று நிதானித்து நினைத்துப் பார்த்தால் கற்பனை இல்லாமலும் கவிதை இயங்க முடியும் என்று தோன்றுகின்றது. ஒன்றைக் கற்பனைக் கண் கொண்டு பார்க்கும்போது அதிலுள்ள இனிமை நம் இதயத்தைத் தொடுகின்றது என்பது உண்மைதான்.

கற்பனை இல்லாமலேயே தெளிந்த, தேர்ந்த சொற்களால் ஒரு பொருளின் உள்ள தன்மையை, உள்ளபடியே உள்ளங் கவரும் வண்ணம் சொல்ல முடியுமேயானால் அதுவும் கவிதைதான்.

"காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண் ஒவ்வேம் என்று"

என்னும் குறட்பாவில் கற்பனை உண்டு; இனிமையும் உண்டு.

"யான்நோக்கும் காலை நிலன்நோக்கும், நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்"

என்பதில் கற்பனை இல்லை; என்றாலும் சுவை உண்டு.

ஆகவே, கவிதையில் கற்பனை கலந்துதான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்க முடியாது. கவிஞன் தன் ஆற்றலுக்கேற்ப எப்படியும் இயற்றலாம். அதில் சுவை இருக்கவேண்டும். அவ்வளவே.

இத்தொகுதியில் கற்பனைத்திறனைக் காட்டும் பகுதிகளும் உள. கற்பனை இல்லாமல் வாழ்வைப் படப்பிடிப்புச் செய்யும் பகுதிகளும் உள. கவிஞர், இரண்டையுமே நன்கு செய்திருக்கின்றார் என்று சொல்லலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/11&oldid=984047" இலிருந்து மீள்விக்கப்பட்டது