பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106


இரண்டாவதாக அமைத்தல்

ஒவ்வொரு வகைப் பணிகளையும் பிரித்துக் கொள்ளுதல் அது அதற்கு எத்தனைபேர் வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளுதல் - என்ன என்ன அளவில் கூலி அல்லது சம்பளம் கொடுப்பது என்று முடிவு செய்தல்.

பொறி இயக்குபவர் எத்தனை பேர் வேண்டும்? துணையாட்கள்- அச்சுக்கோப்போர்- அலுவல் பார்ப்போர் எத்தனை பேர் வேண்டும் என்று முடிவு செய்து அவர்கள் எந்த எந்த அளவு வேலை செய்தல் வேண்டும் என்பதையும் முடிவு செய்து கொள்ளுதல். இவையெல்லாம் அமைத்தல் என்ற பிரிவில் அடங்கும்.

மூன்றாவது ஒப்படைத்தல்

அச்சகத்தின் தொழில் தடையின்றி ஒழுங்காக நடை பெற வேலையாட்களைத் தேர்ந்தெடுத்தலும், அவர்களுக்குரிய பணிகளை ஒப்படைத்தலும் மேலாளரின் பணிகளில் ஒன்றாகும். தேர்ந்தெடுக்கும் வேலையாட்கள், திறமையுள்ளவர்களாகவும், ஒழுங்கு முறைக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் தொழிலில் ஆர்வம் உள்ளவர்களாகவும், நோய்நொடியற்ற சுறுசுறுப்புள்ளவர்களாகவும், கடமை உணர்வுள்ளவர்களாகவும் பார்த்துத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். பணியாளர்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் துணை புரிபவர்களாக இருக்க வேண்டும். அலட்சியப் போக்கு உள்ளவர்களை வேலையில் அமர்த்தக் கூடாது.

அச்சகப் பணியாளர்களை எவ்வாறு அமைப்பது என்பதைக் கீழ்க்கண்ட அமைப்புப்படம் காட்டும்.