பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

படக்கட்டையாகச் செய்து கொள்ளும் முறையும், படிவமாக வார்த்துக் கொள்ளும் முறையும், புகைப்படக் கோப்பு முறையும் என இவ்வாறு கோப்பு முறை வளர்ந்து முன்னேறி உள்ளது.

கையினால் அழுத்தியும் காலால் மிதித்தும் அச்சுப் பொறியை இயங்கச் செய்த முறை போய், மின்னாற்றலால் அச்சிடுதலும், அதிலும் தட்டச்சு முறை, உருளை அச்சு முறை, சுழல் அச்சுமுறை எனப் பலபடி முன்னேற்றத்தைக் காண்கிறோம்.

புத்தகம் தைப்பதிலும் கையினால் தைத்த முறை போய் பொறிகளே தைத்துக் கொள்ளுதலும், மடித்துக் கொள்ளுதலும், பசையிட்டுக் கொள்ளுதலும் ஆகிய பல்வேறு முன்னேற்றத்தைக் காண்கிறோம்.

இவ்வாறு அச்சுத் தொழில் வளர்ந்துள்ள நிலையில் இந்த புத்தகம் அச்சுத் தொழிலின் தொடக்க நிலையையே கற்றுத் தருவதாக அமைந்துள்ளது.

இந்தப் புத்தகத்தில் அச்சுத் தொழிலின் தொடக்க நிலை பற்றிய செய்திகளே உள்ளன.

உலகம் எவ்வளவோ முன்னேறி இருக்க தொடக்க நிலையை கற்றல் பொருந்துமா என்றால், தொடக்கமின்றி வளர்ச்சி காணல் இயலாது என அறிதல் வேண்டும்.

ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கூட்டத் தெரியாதவன், இரண்டும் இரண்டும் நான்கு என்பதையோ, மேலும் பலவிதமான கணக்கறிவையோ பெற இயலாதவனாவான். காலத்தையும் தொலைவையும் கணித்தறியும் அறிவுப் பெருக்கத்தால் தான் விஞ்ஞானிகள் இன்று நிலவுக்கும் மற்றகோள்களுக்கும் தொடர்பு கொள்ளும் திறன் பெற்றுள்ளனர். அடிப்படைக் கணக்கு தேவையில்லை என்று விட்டிருந்தால் இந்த முன்னேற்றத்தை அடைந்திருக்க முடியாது.