பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

உருளை உருள உருள, தாளை நகர்த்தி நகர்த்தி யணைத்து வரவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு தாளாக அச்சாகி மறு புறத்துக்கு வந்து விழும்.

16 பக்கம் அச்சிடக் கூடிய உருளை அச்சுப் பொறியாயின் , ஆயிரம் படிகள் அச்சிட வேண்டுமாயின் ஐநூறு தாள் அச்சிட்டபின் அந்தத் தாள்களை இடம் வலமாகத் திருப்பி மீண்டும் அச்சிட வேண்டும். முன்னும் பின்னும் அச்சான பின் தாளை இரண்டாக வெட்டினால் ஆயிரம் படிகள் கிடைக்கும்.

எட்டுப் பக்கம் அச்சிடக் கூடிய உருளை யச்சுப்பொறியாயின், ஆயிரம் தாளும் ஒருபுறம் அச்சான பின், மீண்டும் பின் புறத்துக்குரிய 8 பக்கங்களை முடுக்கி அதே தாளை இடம் வலமாகப் புரட்டி அச்சிட 16 பக்கம் கொண்ட ஒரு படிவத்தில் ஆயிரம் படிகள் கிடைக்கும்.

பொறி இயக்குபவர் அச்சிடத் தொடங்குமுன் கீழ்க் கண்ட முன்னேற்பாடுகளைச் சரியாகச் செய்து கொள்ள வேண்டும்.

1. பிழைகள் இல்லை என்று உறுதி செய்து பிழை திருத்துபவர், அனுமதித்த பிறகே அச்சிட வேண்டும்.

2. எழுத்துக்கள் யாவும் சரியாகப் பதிந்துள்ளனவா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும். சரியாகப் பதிவாகாத எழுத்துக்களைக் சரியாகப் பதியும்படி செய்ய வேண்டும்.

3. தாளின் முன்னும் பின்னும் உள்ள பக்கங்கள், ஒன்றின் மீது ஒன்று சரியாகப் படிந்துள்ளன என்று கண்ட பின்னரே அச்சிட வேண்டும்.

4. தன் கைகளை நன்றாகத் துடைத்துக் கொண்டு, தாளின் எப்பகுதியிலும் எவ்வித அழுக்கும் படியவில்லை என்று கண்ட பிறகே அச்சிட வேண்டும்.