பக்கம்:மூவரை வென்றான்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

11

வீரமல்ல்னுக்கும் ஒரு நாள் ஆத்திரம் வந்தது. மதுரைச் சீமையில் வேறு வகையான தொல்லைகளுக்கு இலக்காகியிருந்த மங்கம்மாள் ஆட்சியின் துணையை அப்போது எதிர்பார்க்க விரும்பவில்லை அவன்.

வீரமல்லன் ஒரு நாள் துணிந்து தனி ஆளாக நத்தம்பட்டி ஜமீன் மாளிகைக்குச் சென்றான்; ஜமீன்தாரைச் சந்திக்க வந்திருப்பதாகச் சொல்லி அனுப்பினான். ‘வீரமல்லன் தன்னைப் பார்க்க வந்திருக்கிறான்’ என்பதைக் கேள்விப் பட்ட உடனே குடல் நடுங்கியது மருதுத் தேவருக்கு. “ஜமீன்தார் கையாலாகாத வெறும் பயல்களை எல்லாம் பார்க்கிற வழக்கம் இல்லை” என்று பயத்தை மறைத்துக் கொண்டு பதில் சொல்லி அனுப்பினார்.-

இந்தப் பதில் வீரமல்லனிடம் கூறப்பட்டது.

“ஓஹோ பட்டப்பகலில் வாசல் வழியே அனுமதி கோரி வந்தால் உங்கள் ஜமீன்தார் சந்திக்கிற வழக்கம் கிடையாதா? சரி..வரவேண்டிய நேரத்தில், வரவேண்டிய வழியாக, அவர் விரும்பாவிட்டாலும் விரு அவரை வந்து சந்திக்கிறேன் என்று சொல்.”

வாயிற்காவலனிடம் வீரமல்லன் ஆத்திரமாகக் கூறி விட்டுச் சென்ற இந்த வார்த்தைகளை அவனே புரிந்து கொள்ளவில்லை. ‘ஏதோ ஆத்திரத்தில் உளறிவிட்டுப் போகிறான், இதைப் போய் ஜமீன்தாரிடம் சொல்லுவானேன்?’ என்று பேசாமல் இருந்துவிட்டான். வீரமல்லனை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டோம் என்று இறுமாந்திருந் தார் ஜமீன்தார்.

***

அதே நாள் இரவு, ஒன்பது நாழிகை, ஒன்பதரை நாழிகை சுமாருக்கு, ஜமீன்தார் மருதுத் தேவர் நிம்மதி யான உறக்கத்தை நாடி மாளிகையின் மேல் மாடியில் இருந்த சயன அறைக்குச் சென்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/13&oldid=508082" இலிருந்து மீள்விக்கப்பட்டது