பக்கம்:மூவரை வென்றான்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

மூவரை வென்றான்/பெரிய...


நட்டு வளர்த்தால் என்ன? ஒரு பார்க் அமைத்தாலும் நன்றாக இருக்குமே? உங்கள் ஊர்ப் பஞ்சாயத்துப் போர்டார் இதைக் கவனித்துச் செய்யக் கூடாதா?’ என்று அவ்வூர் வாசியிடம் கேட்டேன் நான்.

அவர் சிரித்துக்கொண்டே எனக்குப் பதில் கூறினார். அது பெரியமாயன் செத்த இடம். தப்பித் தவறிக் கள்ளிச் செடிகூட அங்கே முளைக்காதே! இன்றைக்கு நேற்றா அது இப்படி இருக்கிறது? நினைவு தெரிந்த நாளிலிருந்து எங்கள் தலைமுறையிலே அது இப்படிக் கிடக்கிறது. பாவம்; பஞ்சாயத்துப் போர்டார் என்ன செய்ய முடியும்? அந்தப் பொட்டலைப் பற்றிய கதையும் இந்த ஊர் ஐதீகமும் உங்களுக்குத் தெரிந்திருந்தால் நீங்கள் என்னைக் கேட்டிருக்கவே மாட்டீர்கள்.

“வாஸ்தவம்தான் எனக்கு அந்த விவரம் தெரியாதாகை யால் உங்களிடம் கேட்டேன். தெரிவிக்க வேண்டியது உங்கள் கடமை!” - நான் அந்த மனிதரின் வாயைக் கிளறினேன். அப்போது அந்த மங்கலக் குறிஞ்சி வாசியிடம் நான் கேள்விப் பட்டதைத்தான் இப்போது இங்கே விவரித்து எழுதுகிறேன். இது ஒரு ரஸமான கதை.

மங்கலக்குறிஞ்சி ஒரு பள்ளத்தாக்குப் பிரதேசம். ஊரின் கீழ்ப்புறம் பிரம்மாண்டமான கோட்டைச் சுவர்போல இருந்த மலைத்தொடர் நீர்ப்பாசன வசதிக்கும் இயற்கை வளத்துக்கும் இருப்பிடமாக இருந்ததுபோல் கொள்ளைக் காரர்கள் பதுங்கி வாழ்வதற்கும் இடமாக இருந்தது.

மங்கலக் குறிஞ்சியைப்போலவே அந்தப் பள்ளத்தாக்கில் இன்னும் நான்கைந்து வளமான சிற்றுரர்கள் இருந்தன. மலை மேல் எங்கோ மறைந்து வசித்து வந்த ஒரு கொள்ளைக் கூட்டம் இந்த ஊர்களில் அடிக்கடி தன் கை வரிசையைக் காட்டி வந்தது. அப்போது-அதாவது இந்தக் கதை நடந்த தலைமுறையில் மங்கலக்குறிஞ்சியும் அதைச் சேர்ந்த ஊர்களும் ஜமீன் ஆட்சியில் இருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/24&oldid=505899" இலிருந்து மீள்விக்கப்பட்டது