பக்கம்:மூவரை வென்றான்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

23


இருண்ட அமாவாசை இரவுகளில் மலைமேலிருந்து தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் இறங்குவதும் நினைத்தபடி உயிர்களையும் பொருள்களையும் சூரையாடிவிட்டுப் போவதும் வழக்கமாக இருந்தது. கிங்கரர்களாயிருந்த ஈவிரக்கமில்லாக் கொள்ளைக்காரர்களிடம் மக்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்லை.

அப்போது ஜமீன்தாராக இருந்த விஜயாலய மருதப்பத் தேவர் குடியும் கூத்துமாக ஜமீன் மாளிகையை விட்டு வெளியேறாமல் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்ததனால் கொள்ளைக்காரர்களை எதிர்க்கவோ, அடக்கவோ, வலுவான எதிர்ப்பு இல்லாமல் போயிற்று.

சூரியன் மறைந்து இருள் சூழத் தொடங்கிவிட்டால் உயிரும், பொருளும், நிச்சயமில்லை என்று சொல்லும்படியாக இருந்தது. யார் யாருக்கு,உயிர் போகுமோ? யார் யாருடைய வீடு நெருப்புக்கு இரையாகுமோ? - ஒன்றும் உறுதியாக எண்ணுவதற்கும் இல்லை; சொல்லுவதற்கும் இல்லை. கொள்ளைக்காரர்கள் எங்கிருந்து எந்தத் திசை நோக்கி வருவார்கள்? எப்போது வருவார்கள்? எத்தனைபேர் வருவார்கள்? என்னென்ன கொடுமைகளைச் செய்துவிட்டுப் போவார்கள்?-இவைகளில் எதுவுமே அனுமானத்துக்கோ, சிந்தனைக்கோ, எட்டாத விஷயமாகத்தான் இருந்தது.

திடீரென்று ஊருக்கு மேற்கிலோ, கிழக்கிலோ, இருளின் நடுவே புத்து இருபது தீவட்டிகள் தெரியும். அதைத் தொடர்ந்து குதிரைகள் தடதடவென்று ஓடி வருகிற ஓசை கேட்கும். உடனே ஊரில் அத்தனை வீடுகளிலும் கதவடைக்கும் ஒசையும் அதையடுத்துச் சுடுகாட்டு அமைதியும் நிலவும். பின் அந்த இருள் செறிந்த இரவில் யார் யாருக்குப் பறிபோக வேண்டுமென்றிருக்கிறதோ, அவர்களுக்கெல்லாம் பறிபோகும்.

உயிர், உடைமை, கற்பு, எது கிடைத்தாலும் பறித்துக் கொள்ளத் தவறுவதில்லை, அந்தக் கொள்ளைக்காரர்கள் கூட்டத்துக்கும் அதன் அக்கிரமங்களுக்கும் தலைமை வகித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/25&oldid=505900" இலிருந்து மீள்விக்கப்பட்டது