பக்கம்:மூவரை வென்றான்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

மூவரை வென்றான்/பெரிய...


“சரி! இளைய ஜமீன்தாருக்கு என் வணக்கம் வருகிறேன்”-தெய்வச் சிலையார் திரும்பினார். திரும்பினவர் அப்படியே திகைத்துப் போய் நின்றார். அவர் திரும்பிச் செல்லவேண்டிய வழியை மறித்துக் கொண்டு கழியும் கையுமாக ஐந்தாறுபேர் நின்று கொண்டிருந்தனர்.

அவருடைய திகைப்பைப் பார்த்து ஜமீன்தார் கலகல. வென்று சிரித்தார். “பார்த்தீர்களா தெய்வச் சிலைத் தேவரே! என்னோடு பகைத்துக் கொண்டு நிற்பவர்களை நான் எப்போதுமே வெளியில் தப்பிச் செல்லவிடுவதில்லை.”

கழியும் கையுமாக நின்ற ஐந்தாறு முரடர்களும் தெய்வச்சிலைத் தேவரைச் சுற்றிச் சக்கரவியூகமாக வளைத்து வெளியேற முடியாமல் தடுக்கும் பாவனையில் நின்றனர். ஜமீன்தார் தன்னை இரகசியமாகக் கூப்பிட்டனுப்பியது எதற்காக என்று இப்போதுதான் தேவருக்கு மெல்ல விளங்கியது. ஆனாலும் அவர் இவ்வளவு பெரிய ஆபத்தை, எதிர்பார்க்கவில்லை. தனியே வந்தவனை ஆள்விட்டு மறித்துக்கொள்ளும் அளவுக்கு வஞ்சகராகவோ, கிராதகராகவோ, இருப்பாரென்று ஜமீன்தாரைப் பற்றி அவர் எண்ணவில்லை.

தெய்வச்சிலைத் தேவரின் கண்கள் சிவந்தன். மீசை கிளர்ந்து துடித்தது. “நீங்கள் எல்லோரும் ஆண் பிள்ளைகள் தானா? மறக்குடியில் பிறந்தவர்கள்தானா? சேலைகட்டிய பெண்கள் கூடச்செய்ய வெட்கப்படும் காரியத்தைச் செய்கிறீர்களே!”

“நிறுத்தும் தேவரே! நிறுத்தும்.இப்போது உம்முடைய கோபமோ, ஆத்திரமோ, எதுவும் இங்கே பலிக்காது! நான் எதைச் செய்யக்கூடாது என்கிறேனோ அதைச் ‘செய்தே தீருவேன்’ என்கிறீர் நீர்! இன்னொரு முறை கேட்கிறேன். நீர் இந்த முயற்சியை இந்த நிமிஷத்தோடு விட்டுவிட்டால் உம்முடைய வழி உமக்காகத் திறந்திருக்கிறது. இல்லையானால்..?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/32&oldid=507772" இலிருந்து மீள்விக்கப்பட்டது