பக்கம்:மூவரை வென்றான்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

35


நாட்களும், ஊரில் தீவட்டிக் கொள்ளைக்காரர்களின் வரவு நிச்சயம். இந்த முறை அமாவாசை வந்தபோது தெய்வச் சிலைத்தேவரும் அவருடைய ஆட்களும் விழிப்பாக இருந்தனர். இந்த ஐந்து நாட்களில் பெரிய மாயன் கூட்டத்தைப் பற்றி முக்கியமான தடையம் ஏதாவது கிடைக்கும்படி செய்துவிடவேண்டும் என்பது, தேவரின் உறுதியான ஆசை! மலையடிவாரத்துப் புதர்களிலிருந்துதான் பெரியமாயன் கூட்டத்தார் கிளம்பி வருவதாக ஊரில் ஒரு வதந்தி வெகு நாட்களாக நிலவி வந்தது. இந்த வதந்தி மெய்யா, பொய்யா என்பதற்கு நேரில் பார்த்து ஆதாரம் கண்டவர்கள் எவருமில்லை.

ஊரில் வீதிக்கு வீதி தேவையான காவலுக்கு ஏற்பாடு செய்துவிட்டுத் தெய்வச் சிலைத் தேவரும் வேறு சில முக்கிய மான ஆட்களும் மலையடிவாரத்திற்குச் சென்றனர். மலை மேலிருந்தோ அடிவாரத்திலிருந்தோ, ஊருக்குள் இறங்கி வருவதற்குப் பலவழிகள் இருந்தன. தெய்வச் சிலையாரும் அவரோடு போனவர்களும் தனித் தனியே பிரிந்து வழிக்கு ஒருவர் வீதம் இருளில் மறைந்து பதுங்கி வேவு பார்த்தனர். எப்படியும் அன்றிரவிற்குள் கொள்ளைக்காரர்கள் வருகிற வழி, போகிற வழி, முதலிய விவரங்களைத் தெரிந்து கொண்டுவிட்டால், மறுநாள் வழியை மறித்துத் தாக்கி அவர்களைப் பிடிக்க வசதியாக ஏற்பாடு செய்துவிடலாம் என்பது தேவரின் திட்டம்.

அமாவாசை இருள் எங்கும் மைக் குழம்பாகக் கப்பிக் கிடந்தது. மலையடிவாரத்துப் புதர்களின் அடர்த்தியில் இருட்டு இன்னும் பயங்கரமாக இருந்தது. சிள் வண்டுகளின் ‘கீஇஇ, கீஇஇ’ என்ற ரீங்காரம் இருளின் பயங்கரத்துக்குச் சுருதி கூட்டிக்கொண்டிருந்தது. இடையிடையே கோட்டான்களின் அலறல், நரிகளின் ஊளை, பறவைகள் சிறகடிக்கும் ஒலி, எல்லாமாகச் சேர்ந்து இருள் என்ற சாம்ராஜ்யத்தில் பயங்கரம் என்ற ஆட்சியை ஸ்தாபிதம் செய்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/37&oldid=507798" இலிருந்து மீள்விக்கப்பட்டது