பக்கம்:மூவரை வென்றான்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

43


“இந்தக் காரியங்களை எல்லாம நாம் பரம ரகசியமாகச் செய்யவேண்டும். சிலம்பம் வீச நன்றாகத் தெரிந்த வாலிபர்களாக ஒரு ஐம்பது வாலிபர்களையும் தயார் செய்யவேண்டும். மீண்டும் நான் வற்புறுத்திச் சொல்ல ஆசைப்படுகிறேன். எல்லாமே காதும் காதும் வைத்தாற்போலத்தான் நடக்க வேண்டும். நீங்கள் நினைப்பதுபோல கொள்ளைக்காரர்கள் எங்கிருந்தோ வந்து போகவில்லை. நமக்கு மிக அருகிலிருந்தே நம்மிடம் வந்து தொல்லை கொடுத்துவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆகையால் நம் ஏற்பாடுகள் கொஞ்சம் அவர்கள் செவிக்கு எட்டினாலும் ஆபத்து. எல்லாத் திட்டங்களும் பாழாய்ப்போய்விடும். நான் கூறியவைகளோடு நாளை நடுப்பகலில் நாம் ஐயனார் கோவில் வாசலில் இரகசியமாகச் சந்திப்போம். நடக்கவேண்டியவற்றைப் பின்பு அங்கே கவனிக்கலாம். இன்றிரவும் கொள்ளைக்காரர்கள் குதிரை மேலேறித் தீவட்டிகள் சகிதமாக ஊருக்குள்தான் போயிருக் கிறார்கள். இன்று நாம் பலமான கட்டுக் காவலுக்கு ஏற்பாடு செய்துவிட்டு வந்திருப்பதால் ஊரில் அதிகமாகச் சேதம் இருக்காது, எதற்கும் போய்ப் பார்க்கலாம்; வாருங்கள்!”

தெய்வச்சிலைத் தேவர் கிளம்பினார். மற்றவர்களும் கிளம்பினார்கள். அப்போது இரவு மூன்றாம் ஜாமத்துக்கும். மேல் ஆகியிருந்தது. அமாவாசை இருட்டில் காட்டுப் புதர் சுளின் வழியே ஊருக்கு நடந்து செல்வது கடினமாக இருந்தது. எப்படியோ தட்டுத் தடுமாறிப் போய்ச் சேர்ந்தார்கள். ஊரில் கொள்ளைச் சேதமும் நெருப்புச் சேதமும் அதிகம் இருக்காது என்று அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாகக் கட்டுக் காவலையும் மீறி அதிகச் சேதத்தையே விளைவித்துச் சென்றிருந்தனர்-தீவட்டிக் கொள்ளைக்காரர்கள். இந்த அதிர்ச்சியில் அவர்கள் ஆத்திரம் உறுதிப்பட்டது. மறுநாள் எப்படியும் அந்த அக்கிரமக்காரக் கும்பலை வேரறுக்காமல் விடுவதில்லை என்ற பிரதிக்ஞையோடுதான் ஒவ்வொரு வரும் உறங்கச் சென்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/45&oldid=507809" இலிருந்து மீள்விக்கப்பட்டது