பக்கம்:மூவரை வென்றான்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

59


“இப்பொழுதே ஆயுதங்களை எடுத்துக்கொண்டு புறப்படுங்கள்! அந்தக் கரிசல்குளத்தானுக்குச் சரியானபடி புத்தி புகட்டுவோம்!” என்று இடியேறு போல முழங்கியது வெள்ளையனின் குரல்.

மறுவிநாடி அங்கே இருந்த அத்தனை பேருடைய கைகளிலும் பாலாக்கம்புகளும், வெட்டரிவாள்களும் மின்னின. கபிலக்குறிச்சியின் தன்மானத்தின் சக்தி எவ்வளவு பெரியது” என்பதைப் பிரத்தியட்சமாகக் காட்டினர் அங்குள்ளோர். அந்தி மயங்கி, இருள் சூழும் நேரத்தில் கரிசல்குளத்தையே சூறையாடிவிடுவது என்ற நோக்கத்தோடு புறப்பட்டனர் அவர்கள்.

அந்த நேரத்தில்தான் வெள்ளையனுக்கு முறைப்பெண் கொடுத்த மாமன், செய்தியைக் கேள்விப்பட்டு, அவசரமாக ஓடிவந்தார். புறப்பட்டவர்கள் அவரால் கையமர்த்தி நிறுத்தப்பட்டனர். வெள்ளையனும் தயங்கி நின்றான்.

அவ்ர் கூறினார்:- “வெள்ளை, ஆத்திரப்பட்டு எதையும் செய்யாதே! அவசியம் வரும்போது வெட்டரிவாளும், பாலாக் கம்பும் கிடைக்காமலா போய்விடப்போகின்றன? கொஞ்சம் பொறு! நான் உள்ளே போய் மீனாட்சியிடம் பதமாக விஷயத் தைக் கேட்டுக்கொண்டு வருகிறேன். அவன் இவளை ஒதுக்கி: விட்டு, மறுதாரம் கட்டிக்கொள்வதில் ஏதோ ஒரு சூழ்ச்சி அட்ங்கியிருக்கிறது. அதை அறிந்த பின், நாம் ஆவன செய்யலாம்!... தயவுசெய்து நான் விசாரித்துக்கொண்டு வருகிறவரை நீயும், தலைக்கட்டுக்களும் இங்கேயே இருக்க வேண்டும்” என்று இப்படி வேண்டுதல் செய்து கொண்டு உள்ளே சென்றார் வெள்ளையத் தேவனின் மாமன். தேவனும் அவனைச் சேர்ந்தவர்களும் அவருக்காகத் தாமதித்து நின்றார்கள்.

கால் நாழிகையில் அவர் உள்ளிருந்து திரும்பி வந்தார். அவர் முகத்தில் தெளிவு தென்பட்டது. வெள்ளையத் தேவனின் அருகே வந்து நின்றுகொண்டு அவர் கூறினார்:-